மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாண்டிச்சேரியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் பாஜகவுக்கு மாநிலங்களவை இடத்தை என் ஆர் காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் – பாஜக இடையே மாநிலங்களவை இடம் குறித்து இழுபறி நீடித்து வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நேற்று வரை பாஜகவிற்கு மாநிலங்களவை இடத்தை விட்டு தர மறுத்த முதலமைச்சர் ரங்கசாமி திடீரென மாநிலங்களவை இடத்தை பாஜகவிற்கு விட்டு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக என்.ஆர். காங்கிரஸ் மாநிலங்களவை இடத்தை விட்டு கொடுத்துள்ளதாகவும், மாநிலங்களவை பாஜக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.செல்வகணபதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக உள்ள செல்வகணபதி கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். செல்வகணபதியை அதிகாரப்பூர்வ வேட்பாளராக பாஜக டெல்லி மேலிடம் இன்றைக்குள் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பாக்கப்படுகிறது.




