நல்லது நினைக்கும் அனைவருமே எம்.ஜி.ஆரின் வாரிசுகள்தான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பான விவாதங்கள் தற்போது ஆரம்பித்திருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தின்போது தான்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று தெரிவித்தார். இதற்கு அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் ஏற்கனவே தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் எனக் கூறியுள்ளார். எம்.ஜி.ஆரைப் பற்றி பேசும் ரஜினியும் கமலும் அதிமுகவில் இணைந்துகொள்ளலாம் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சனம் செய்திருந்தது. மக்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என முதல்வர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை கமல்ஹாசன் துவங்கினார். அப்போது, மீனவ மக்களிடையே பேசிய அவர், சட்டப்பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என்று உறுதி அளித்தார். மேலும் உப்பை சுவாசித்த மீனவர்களிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும் எனவும் கூறினார்.
read more: வருமான வரித் துறைக்கு தகவல் சொல்கிறார்கள்: துரைமுருகன் காட்டம்!
தொடர்ந்து, தேர்தல் வந்ததால் எம்ஜிஆரை கொண்டாடுவதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி என்றால் இத்தனை நாட்களாக அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்களது முதல் கோஷமே நாளை நமதே என்றவர்,
எம்ஜிஆர் மக்கள் திலகம். அதனால் யார் வேண்டுமானாலும் அவரின் வாரிசு என்று சொல்வார்கள். நல்லத்தை நினைக்கும் எல்லோரும் எம்.ஜி.ஆர்.வாரிசு தான். அதனால் நானும் எம்.ஜி.ஆர் வாரிசு தான். மீண்டும் சொல்கிறேன் எம்.ஜி.ஆரின் நீட்சி நான் என்றும் பிரச்சாரத்தில் பேசினார்.