நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை தி.மு.க.வை பாதிக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். உதகையில் விடியலை நோக்கி பிரச்சாரத்தில், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஈடுபட்டார். பி்ன்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
வெற்றி உறுதி
பிரச்சாரப் பயணத்தில் மக்களைச் சந்தித்தபோது தி.மு.க. வெற்றி உறுதி எனத் தெரியவருகிறது. இந்த 10 ஆண்டுகளில் மக்கள் எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லாமல், வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்ட சூழலில் உள்ளனர். படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்சினை சரி செய்யப்படவில்லை. பெண்கள் சிரமங்களுக்குத் தீர்வு காண வேண்டும். தேயிலை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தேயிலைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பின்னர் காய்கறி, தேயிலை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க.வை பாதிக்காது
மாணவர்கள் உயர் கல்விக்காக வேறு மாவட்டங்களுக்குச் சென்று படிக்கும் நிலை உள்ளது. அரசு இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முயற்சி எடுக்கவில்லை. பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன.ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. அதனால் அவர் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை. அரசியலுக்கு வராதவரைக் குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது. யார் வந்தாலும் தி.மு.க.வின் வெற்றி பாதிக்காது. மக்கள் தெளிவாக உள்ளனர்.
தமிழகத்தில் பிரதான கட்சிகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளன. யார் கட்சியைத் தொடங்கினாலும் எங்களைப் பற்றித்தான் பேசுவார்கள். எதிலுமே அரசின் செயலாபாடுகள் சரியாக இருந்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.