ஆ.ராசாவுடன் விவாதத்திற்கு தயார் என அறிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக பட்ஜெட் தொகையைப் போல, 2 ஜியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக தான் என்றும்,திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு 2ஜி அலைக்கற்றை ஊழல் நிகழ்ந்ததாகவும் குற்றம்சாட்டினார். இவ்வழக்கில் ஸ்டாலினும் விரைவில் சிக்குவார் என கூறினார்.
இதற்கு பதில் அளித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, 2ஜி குறித்து முதல்வருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்குநேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அனைத்து அமைச்சர்கள், அட்டார்னி ஜெனரல் உள்பட யாரை வேண்டுமென்றாலும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். நான் தயாராக இருக்கிறேன்’ என அதிமுகவுக்கு சவால் விடுத்திருந்தார்.
விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதற்கு பதிலளித்தார்.
2ஜியில் ஊழல் செய்த பணத்தை பதுக்கி வைத்துள்ளார் ஆ.ராசா எனவும், அதனால் தான் ராசாவை கூடவே வைத்துள்ளார் ஸ்டாலின் என்றும் கூறினார் அமைச்சர்.
ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்தால் எடப்பாடியார் எதற்கு வரவேண்டும். நான் வருகிறேன். திமுக தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “எடப்பாடியை பற்றி பேச ஆ.ராசாவிற்கு என்ன அருகதை உள்ளது? ஜெயலலிதாவையோ எடப்பாடியையோ பற்றி பேச ஸ்டாலினுக்கோ ஆ.ராசவிற்கோ தகுதியில்லை.
நாங்கள் சொத்து பட்டியலை தற்போதே வெளியிடுவோம். ஆ.ராசாவால் சொத்துப்பட்டியலை வெளியிடமுடியுமா? மோட்டார் சைக்கிள் கூட இல்லாமல் இருந்த ஆ.ராசா தற்போது எப்படி வெளிநாட்டு காரில் செல்கிறார்” என்று கேள்விகளை எழுப்பினார்.
நாங்கள் பாஜகவிடம் கட்சியை அடமானம் வைக்கவில்லை. காங்கிரஸிடம் தான் திமுக அடமானத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.




