நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், ஐதராபாத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதால் நேற்று சென்னை திரும்ப இருந்தார். இந்த நிலையில் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
“ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு பாதிப்பு உறுதியானது. எனினும், அறிகுறி ஏதும் இல்லை, சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்து அடுத்தடுத்த தகவல்களை பகிர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதுபோலவே வரலட்சுமி சரத்குமாரும், அப்பாவுக்கு கோவிட் தொற்று வந்திருக்கிறது. தற்போது ஹைதராபாத்தில் நல்ல மருத்துவர்கள் கண்காணிப்பில் தேறி வருகிறார். தொடர்ந்து உங்களுக்குத் தகவல் பகிர்கிறேன் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மனிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக தயாராகி வரும் சரத்குமார், அதற்காக இந்த கொரோனா காலத்தில் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் வெளியான சரத்குமாரின் போட்டோ ஷூட் ஒன்றில், 66 வயது ஆனவர் போலவே தெரியாத அளவுக்கு கட்டுக்கோப்பான உடலுடன் இளமையாகத் தெரிந்தார் சரத்குமார்.
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உடற்பயிற்சிகள், உணவு முறைகளை சரத்குமார் எடுத்துவருவதால் அவர் ஒருசில நாட்களில் கொரோனாவிலிருந்து மீண்டுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.