சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடியவுள்ளதை அடுத்து சசிகலா வரும் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையாக உள்ளார். இந்த நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று மாலை பெங்களூரு பவரிங் மருத்துவமனையில் சசிகலா திடீரென அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத் திணறல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சசிகலாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. தொடர்ந்து சிடி ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சசிகலாவுக்கு அங்கு ஐசியூவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. நீரிழிவு, ரத்த கொதிப்பு, தைராய்டு, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நுரையீரல் தொற்று அதிகமாக இருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் சசிகலா இருப்பதாக தெரிவித்தது.
read more: 234 தொகுதிகளிலும் திமுக கனவில்தான் வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு மீண்டும் ஆர்டி பிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்த நிலையில், தற்போது தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் சசிகலா.