மத்திய அரசின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுவது தலித் விரோதப் போக்கு என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை
பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தைக் கைவிடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 11, 12ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 18 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான நிதியை மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் ஒதுக்கி வந்தன.

தலித் விரோதப் போக்கு
நாடு முழுவதும் 60 லட்சம் மாணவர்கள்தான் கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார்கள். தற்போது இந்தத் திட்டம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தைக் கைவிட்டு விட்டு, பிரதமரின் பெயரில் பட்டியலின, பழங்குடியின மற்றும் பின்தங்கிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என அனைத்துத் தரப்பினருக்குமான புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

போராட்ட எச்சரிக்கை
ஏற்கனவே 65 லட்சம் பட்டியலின மாணவர்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், பிரதமரின் புதிய பெயரிலான கல்வி உதவித்தொகை திட்டத்தில் மொத்த பயனாளி மாணவர்களே 62 லட்சமாகக் குறைத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இது ஒடுக்கப்பட்ட மாணவர்களையும், முன்னேறிய வகுப்பு மாணவர்களையும் ஒரே தட்டில் வைத்து, கல்வி உதவித்தொகை வழங்குவது சமூக நீதியைக் குழிதோண்டி புதைக்கிற செயலாகும். இதன்மூலம் பாஜக அரசு தனது தலித் விரோதப் போக்கையே வெளிப்படுத்தியிருக்கிறது. இதில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை மீண்டும் தொடர்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




