முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் கேட்ட அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் பேராவூர் அருகே ரூபாய் 134 கோடி மதிப்பிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் 50,752 பயணிகளுக்கு ரூபாய் 42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். பின்னர் பேசிய ஸ்டாலின், தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே மத்திய அரசுக்கு ஏன் கசக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்து சமூக வலைதளத்தில், எடப்பாடி பழனிசாமி கேள்வியை எழுப்பியுள்ளார். அதில், பொம்மை முதல்வர் ஸ்டாலின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது.
கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் 39 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பேசாமல், இப்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள்!
#KarurTragedy-யின் போது அவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் எல்லாம் ஏன் அப்போது அங்கே செல்லவில்லை? இது அரசியல் தானே? என்று வீராவேசமாகப் பேசும் பொம்மை முதல்வரே… நான் கேட்கிறேன்- கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?
ஆட்சி நிர்வாகத்தில் Failure, நிதி நிர்வாகத்தில் Failure, சட்டம் ஒழுங்கைக் காப்பதில் Failure, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் Failure, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் Failure, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் Failure, என மக்களை நாள்தோறும் வாட்டி வதைக்கும் உங்கள் Failure Model திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே, எங்கள் கூட்டணியின் கொள்கைக்கான அடிப்படை! உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதால், தமிழக மக்களின் நலனும், மாணவர்களின் எதிர்காலமும், பெண்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்பதே எங்கள் கூட்டணிக்கான பொதுக் காரணம்! இதை விட ஒரு வலுவான, மக்கள் நலன் சார்ந்த அடிப்படைக் காரணம் தேவையா என்ன?
உங்களைப் போல் அல்லாமல், “கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு” என்று நான் மக்களோடு தான் இருக்கிறேன் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். அதற்கு நன்றி. உங்கள் ஆட்சியின் தவறுகளைச் சொன்னால், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், அதிலும் நீங்கள் அரசியல் செய்யும் அவலத்தை தோலுரித்தால், அது உங்கள் கண்ணுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்வது ? சரி… பயப்படுறீங்க… இருக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.





