தேர்தல் நேரம் என்பதால் ரூ. 2,500 பொங்கல் பரிசுக்கான டோக்கனை அதிமுகவினரை வைத்து வழங்குவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை அடுத்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு அடையாளமாக கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில் சிலருக்கு பொங்கல் பரிசை முதல்வர் வழங்கினார்.
எனினும், பொங்கல் பரிசை தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் லஞ்சம் என்றே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இருந்தாலும் பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 28) வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா பாதிப்பு ஆரம்பித்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், அந்த கொரோனாவைக் காட்டி, 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். கொரோனா, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காலம் கடந்து இப்போது 2500 ரூபாய் பொங்கல் பரிசாவது கிடைக்கிறது என மகிழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டார்.
இப்போது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க.வினரை வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் செய்ய வைக்கிறார் முதல்வர் என்ற ஸ்டாலின்,
“பொங்கல் பரிசு அரசு கஜானாவில் இருந்து வருகிறது. அது மக்களின் வரிப்பணம். அது மக்களுக்கே திரும்பிப் போவதைத் திமுக மனமார வரவேற்கிறது. அதே நேரத்தில் தேர்தலுக்காக, அரசின் பொங்கல் பரிசை அதிமுகவினரை வைத்து எப்படி வழங்கச் சொல்கிறார் முதலமைச்சர்? அரசு கஜானாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை அதிமுகவினர் ஏன் கையாள வேண்டும்? என்று கேள்விகளை எழுப்பினார்.
read more: ரஜினிக்கு கட்சி முக்கியமல்ல, ஆரோக்கியம்தான் முக்கியம்: கமல்ஹாசன்
மேலும், “அதிமுகவினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதல்வர் பழனிசாமி உடனே நிறுத்திட வேண்டும். பொங்கல் பரிசு வழங்கும் பணி ரேசன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும். அ.திமுகவினர் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் உடனடியாகத் தடுக்காவிட்டால், திமுக ஆட்சியில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும்” என எச்சரிக்கையும் விடுத்தார்.




