அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மனக்கசப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த நாடு இந்தியா. நாடாளுமன்றத்தில் 2 புதிய விவசாயச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி.
புதிய விவசாயச் சட்டத்தால் வரிகள் குறையும். நேரடி வர்த்தகம் ஊக்குவிக்கப்படும். வெளிநாடு, உள்நாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும். இந்த சட்டத்தால் இடைத் தரகர்கள் முறைக்கு வாய்ப்பு இல்லை.

விளை பொருட்களைக் கள்ளச் சந்தையில் பதுக்க முடியாது. விவசாயிகளுக்கு அதிக லாபத்தை புதிய சட்டம் வழங்கும். விவசாய ஒப்பந்தம் உள்ளூர் மொழிகளில் இருக்கும்.
தவறான பிரசாரம்
புதிய விவசாயச் சட்டத்தால் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதனைத் தீர்க்க உள்ளுர் குழுக்கள் அமைக்கப்படுவதோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் குறைகள் தீர்க்கப்படும். புதிய சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்கிறார்.
விளைவிக்கும் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்தவே புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் விவசாயிகள் மட்டுமே விலையை நிர்ணயிக்க முடியும் எனக் கூறினார்.
கிசான் முறைகேடு:
தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்குக் கிசான் திட்டம் கொடுக்கப்படுகிறது. கிசான் திட்ட மோசடியில் தமிழக அரசு இன்னும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க. உடன் மனக்கசப்பா?
அ.தி.மு.க. – பா.ஜ.க.வுக்கு இடையே எந்தவொரு மனக்கசப்பும் கிடையாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி தொடரும். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரின் நிலைப்பாட்டை தொடர்ந்தே நடவடிக்கைகள் தெரியும் என, எல்.முருகன் தெரிவித்துள்ளார்.




