தமிழ்நாட்டில் உள்ள மூத்தகுடிகள் மற்றும் மாற்றுத்திறனாளில் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை நாளை தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக சிறப்பு பிரிவை சேர்ந்த முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்களுக்கு என பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது, அதில் ஒன்றுதான் சிறப்பு கவனம் தேவைப்படும் 70 வயது முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக நியாயவிலை கடைகளில் சென்று வாங்குவதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடதிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை நாளை காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தண்டையார்பேட்டையில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த திட்டம் மூலம், தமிழ்நாட்டில் செயல்படும் 34,809 நியாய விலைக்கடைகளின் கீழ் 16,73,333 குடும்ப அட்டைகளில் இருந்து, 20,42,657 மூத்தகுடிகள் மற்றும் 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21,70,454 பேர் பயன்பெற உள்ளனர். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூத்தகுடிகள் மற்றும் மாற்றுத்திறனாளி இல்லங்களுக்கு நேரடியாக சென்று மின்னணு எடை தராசு, epos இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் கூடிய வாகனங்களில் குடிமை பொருட்கள் விநியோகப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு ரூ.30.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




