மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுவரொட்டிகள்
மு.க.ஸ்டாலினை கொச்சைப்படுத்தி அ.தி.மு.க.வினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தி.மு.க. தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததன் விளைவாக ஒட்டியவர்களே சில இடங்களில் சுவரொட்டிகளைக் கிழித்துள்ளார்கள். பல இடங்களில் காவல்துறை கிழித்துப் போட்டிருக்கிறார்கள்.
கோவை, குனியமுத்தூர் பகுதியில் அப்படி பெயர் போடாமல் அநாகரிகமாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், புகார் கொடுத்த தி.மு.க.வினர் மீதே வழக்குப் போட்டு கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்கிறது அங்குள்ள காவல்துறை. அப்படிப் பொய் வழக்குப் போடுவதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருக்கிறார் என்பது சட்டவிரோதம். தி.மு.க. இதுபோன்ற சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது. எங்கள் தலைவரைக் கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டுவதை, எங்கள் தொண்டர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இதுபோன்று தரக்குறைவான சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
போராட்டம்
தி.மு.க.வினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.