3 வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே நாட்டின் ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப்போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அங்கே தொடர்ந்து வன்முறை நடந்துள்ளது. கடந்த 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். அதனை ஒன்றிய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.
இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே நாட்டின் ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்!, என தெரிவித்துள்ளார்.