அவ்வப்போது தீ எரிவதைப் போல புகைவதும், பின் அணைந்து விடுவதுமாய் இருந்த பாமக சடாரென வீசும் காற்றில் பற்றி எரியும் நெருப்பை போல தற்போது பற்றி எரியத் தொடங்கி இருக்கிறது. அரசியல், கூட்டணி கணக்குகள், நிர்வாகிகள் நியமனம், தொகுதிப் பங்கீடுகள், பிரச்சினைகள் என ஒரு அரசியல் கட்சிக்கே உரிய கணக்குகள் பாமகவில் இருந்தாலும் அது அப்பா – மகன் சண்டையாய், தனிநபர் தாக்குதலாய் மாறிப் போனதில் மாம்பழத்தின் சுவை கசப்பாய் மாறியிருக்கிறது.

என்ன நடக்கிறது பாமகவில். நேற்று காலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்கலங்கிய படியே கொடுத்த பேட்டி தமிழக அரசியல் பார்த்திராதது. இரண்டு மகன்களில் ஒரு மகனைப் பாதுகாக்க ஒரு மகனைப் பகைத்த கதை ஏற்கனவே இங்கு இருந்தாலும் இந்தக் கதை கொஞ்சம் புதிது. தன் மகன் என்றும் பாராமல் அன்புமணி மீது ராமதாஸ் தொடுத்த தனிநபர் தாக்குதல் பாமகவினரை மட்டுமல்ல மற்றவர்களையுமே சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. “தலைமைப் பண்பு அறவே இல்லாதவர், கூசாமல் பொய் பேசுபவர், தாயை பாட்டிலைக் கொண்டு அடித்தவர், குருவை தரக்குறைவாக நடத்தியவர், வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது, மன உளைச்சலால் எனக் கூறி அனுதாபம் தேட முயற்சிக்கிறார்” என ராமதாஸ் கொளுத்திப் போட்டதெல்லாம் அணுகுண்டுகள்.
தன் மகன் எத்தனை கெட்டவனாக இருந்தாலும் மற்றவர்கள் முன்னிலையில் விட்டுக் கொடுக்காத பழக்கத்தைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு ராமதாசின் நேற்றைய பேட்டி அதிர்ச்சியோ அதிர்ச்சி தான். “என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்” எனச் சத்தியம் செய்து விட்டு பின் அதை மீறியது, மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தந்தது, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற திட்டத்தை உருவாக்கி அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியது, கட்சியின் தலைவராக்கியது, பின் செயல் தவைவர் என அறிவித்தது, தலைவரை ஆலோசிக்காமல் இளைஞரணி தலைவரை நியமித்தது என எல்லாவற்றையும் செய்து விட்டு தற்போது என் தவறு தான் தமிழ்நாட்டிற்கும் கட்சியினருக்கும் அறிவித்திருக்கிறார்.
வளர்ந்து வரும் ஒரு கட்சியின் தலைவரை மொத்தமாக டேமேஜ் செய்திருக்கிறார் ராமதாஸ். நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே வீட்டிற்குள் புகைச்சல் கிளம்பிய வண்ணம் தான் இருந்திருக்கிறது என ராமதாசின் பேச்சிலிருந்தே அறிய முடிகிறது. கட்சியைத் தொடங்கிய ராமதாசுக்கு நிச்சயம் ஒரு கனவு இருந்திருக்கும். தான் சார்ந்த சமூக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்திருக்கும். தன் இன மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அவர் கிராமங்கள் தோறும் பயணித்ததை அனைவரும் அறிவார்கள். தேர்தல் அரசியலுக்கு வந்த பிறகு எத்தனையோ தேர்தலில் நின்று அவர் வெற்றி பெற்று கூட்டணி அமைச்சரவையில் முக்கியமான இடத்தை அலங்கரித்திருக்க முடியும். ஆனால் இதை இப்போது வரை ராமதாஸ் செய்யவில்லை.

தேசியக் கட்சிகளோடு பெரிய அளவில் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பாதவர் ராமதாஸ். மாநிலக் கட்சிகளுடனான கூட்டணி மூலமாக மத்தியிலும் சாதித்துக் கொள்ளலாம் என்பது அவரது கணக்கு. அதையும் சாதித்தும் காட்டியிருக்கிறார். ஆனால் கூட்டணி கட்சியினரோடு நிலையற்ற தன்மை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாறி மாறி பயணிப்பதை வழக்கமாகக் கொண்டதால் மக்கள் மற்றும் தன் இன மக்களின் நம்பிக்கையை இழந்து மாநிலக் கட்சி என்ற அந்தஸ்த்தையும் இழந்தது பாமக.
கடந்த ஒரு மாத காலமாக உனக்கா எனக்கா என விளையாடிக் கொண்டிருந்த கண்ணாடியை இருவருமாகச் சேர்ந்து உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவார்களா, சமுதாய மக்கள் பாதிக்கப்படுவார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லி விடலாம்.
இளைஞரணி தலைவர், எம்.பி., மத்திய அமைச்சர், ராஜ்யசபா எம்.பி என வளர்ந்து கடைசியாக வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தார் அன்புமணி. தலைவரான பின் அவர் சந்தித்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது தலைமை உள்பட அனைவருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கூட்டணியை சரியாக அமைக்கும் கூறுணர்வு இல்லை என பெயர் வாங்கினார் அன்புமணி. பாஜகவுடனான கூட்டணியை அன்புமணி தேடிப் போவதற்கான காரணம் அமைச்சர் பதவி மட்டுமல்ல, அதைத் தாண்டிய விசயங்களும் இருக்கின்றன என்பதை கட்சியினர் உணர்ந்தே இருக்கின்றனர். ராமதாஸ் குறிப்பிட்டது போல நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தால் மூன்று அல்ல, இரண்டு இடங்களில் உறுதியாக பாமக வெற்றி பெற்றிருக்கும். தன் மனைவி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதை தடுத்த பெருமை அன்புமணிக்கு உண்டு.

கடந்த ஒரு மாத காலமாக உனக்கா எனக்கா என விளையாடிக் கொண்டிருந்த கண்ணாடியை இருவருமாகச் சேர்ந்து உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவார்களா, சமுதாய மக்கள் பாதிக்கப்படுவார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லி விடலாம். பாதிப்பு என்னவோ அவர்கள் இருவருக்கும் தான். இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு நிர்வாகிகளை சந்திக்க இருக்கிறார் அன்புமணி. இந்தக் கூட்டத்திற்கு முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ முக்கிய அறிவிப்புகளை அன்புமணி வெளியிடலாம். நேற்று இரவு தைலாபுரத்தில் தன் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராமதாஸ் 25 மாவட்ட செயலாளர்களை நீக்க உள்ளதாக முடிவு எடுத்திருப்பதாகத் தெரிகிறது. தேவைப்படுமானால் நிர்வாகிகளைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன் என ராமதாஸ் சொன்னதை கவனிக்க வேண்டியுள்ளது. அதே வேளையில் தலைவர் என்ற முறையில் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி முக்கிய முடிவுகளை, தீர்மானங்களை நிறைவேற்ற அன்புமணி திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. என்னென்னவோ கனவுகளோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தற்போது பத்தோடு பதினொன்று அளவிற்கு சிறுத்து வருவது கண்கூடு. இரண்டு டாக்டர்களுக்கு இடையே நடைபெறும் இந்தக் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் யார் இன், யார் அவுட் என்பது விரைவில் தெரிந்து விடும். இல்லை இருவருமே சேர்ந்து மற்றவர்களை அவுட்டாக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் இதயம் இனித்தது, கண்கள் பனித்தன கதையைப் பார்த்த வரலாறும் தமிழகத்திற்கு இருக்கிறது.
இந்தக் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் யார் இன், யார் அவுட் என்பது விரைவில் தெரிந்து விடும். இல்லை இருவருமே சேர்ந்து மற்றவர்களை அவுட்டாக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் இதயம் இனித்தது, கண்கள் பனித்தன கதையைப் பார்த்த வரலாறும் தமிழகத்திற்கு இருக்கிறது
தந்தை மகன் முட்டலால் பாதிப்படைந்திருப்பது பாமகதான். தேர்தல் நேரத்தில் பாமகவிற்கு என ஒரு சந்தை மதிப்பு இருக்கும். அது இப்போது குறைந்து விட்டது.




