பரிணாம வளர்ச்சி தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. குரங்கில் இருந்து மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்து வந்தான். அதுபோல பூமியில் உயிர்கள் தோன்ற ஆரம்பித்த காலத்தில் இருந்து அனைத்து உயிரினங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டேதான் இருக்கின்றன. அவைகளின் தேவைக்கேற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து நாட்டை பூர்விகமாகக் கொண்ட உயிரினமான கிவி பறவைகள் தங்கள் கண் பார்வையை இழப்பது தெரியவந்துள்ளது. இது குறைபாடு காரணமாக ஏற்படவில்லை. பரிணாம வளர்ச்சி காரணமாக கிவி பறவைகளுக்கு கண்களின் தேவை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக நல்ல உடல்நிலையுடன் அவை இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தொட்டு உணர்தல், முகர்தல், கேட்கும்திறன் ஆகியவை மிகச்சிறப்பாக வேலை செய்யும்போது கண்களின் தேவை குறைகிறது. கண்களுக்கு என தனியாக உடல்ஆற்றல் செலவிடப்படுவது இதன் மூலம் குறைக்கப் படுவது பரிணாம வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்தின் OKArito காடுகளில் இருக்கும் 160 கிவி பறவைகளை ஆராய்ந்ததில் மூன்று பறவைகள் கண் பார்வையின்றி இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்தில் இவை குறைபாடுடைய பறவை என்றே விஞ்ஞானிகள் எண்ணியிருந்த நிலையில் அம்மூன்று பறவைகளும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னரே இது பரிணாம வளர்ச்சியினால் ஏற்பட்டது எனும் முடிவுக்கு வந்தனர்.
பரிணாம வளர்ச்சி காரணமாக பார்வையை இழக்கும் முதல் விலங்கினம் கிவி அல்ல. இதற்கு முன்னரே ஒரு சில மீன்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள் பார்வையை இழந்துள்ளன. இதன் மூலம் உயிர் வாழ்வதற்கு பார்வை இன்றியமையாத தேவையில்லை என்பது உறுதியாவதாக தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். பரிணாம வளர்ச்சியினால் ஒரு உயிரினத்துக்கு கண்பார்வை இல்லாமல் போவதற்கு காரணமாக அவை எங்கு வாழ்கின்றன, எப்படி வாழ்கின்றன போன்ற சூழ்நிலைகளே முக்கிய காரணிகளாக அமைகின்றன. கிவிக்கள் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக செயல் படக்கூடியவை. தேவைக்கு ஏற்றார்போல அங்கு உணவும் அவற்றுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. அவற்றை தாக்கும் வகையான எந்த உயிரினங்களும் அங்கு இல்லை. இதைப் போன்ற காரணங்களால் கண்களின் தேவை அங்கு இல்லாமல் போய்விடுகிறது.
Sonic Hedgehog எனப்படும் மரபணுவே இந்த கண் பார்வை இல்லமல் போவதற்கான முக்கிய காரணியாக இருப்பதுடன் இவை கண் பார்வையை பறித்தாலும் தொடுதல், முகர்தல் போன்ற புலன்களை அதிகளவில் ஊக்கப்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இந்த Okarito கிவி பறவைகளை ஆராய்வதன் மூலம் உயிர்கள் தொடங்கிய காலத்தில் இருந்து கண்பார்வை எவ்வாறெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. ஆனால் அப்பறவை இனமோ தற்போது அழிவின் விழிம்பில் உள்ளன. அப்பகுதியில் தற்போது மொத்தமே 400 கிவி பறவைகள் தான் இருப்பதாக தெரிய வந்துள்ளது.







