உலகளாவிய மீத்தேன் வாயு உமிழ்வு என்பது கடந்த சில வருடங்களில் மிக அதிக அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலக்கரிச் சுரங்கம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி, கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு, குப்பை கிடங்குகளில் இருந்து வெளியேறும் வாயு போன்றவை மீத்தேன் கசிவுக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. 2000 முதல் 2017ம் ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட கணக்கின் படி Green house gases எனப்படும் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வால் இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமியின் வெப்பநிலை 3 முதல் 4டிகிரி வரை அதிகரிக்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு ஆபத்து?
இது பூமியின் மிகவும் ஆபத்தான காலகட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த வெப்பமயமாதலால் காட்டுத்தீ, வறட்சி மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளும் சமூக சீர்குலைவுகளான பஞ்சம் மற்றும் வெகுஜன புலம்பெயர்வு போன்றவை அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
கார்பன் டை ஆக்சைடை விட மூன்று மடங்கு ஆபத்தான இந்த மீத்தேன் வாயு 60கோடி டன் அளவுக்கு பூமியால் உறிஞ்சப்பட்டுள்ளது. அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பூமியை வெப்பமாக வைத்துக்கொள்ள இந்தவாயுவே போதுமானதாக பார்க்கப்படுகிறது.
காரணிகள்:
மீத்தேன் வாயு கசிவில் fossil fuel sources எனப்படும் புதைபடிவ எரிபொருள் மூலங்களும் கால்நடை வளர்ப்பும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளைப் போல் செயல்படுகின்றன. கொரோனா காலங்களில் கரியமில வாயு கசிவு குறைந்தாலும் மீத்தேன் வாயு கசிவு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் உமிழ்வு அதிகரித்துள்ளது. சீனா, தெற்காசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் உமிழ்வு அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மட்டுமே விதிவிலக்காக தங்களின் உமிழ்வை குறைத்துக் கொண்டுள்ளது.
சாத்தியமான தீர்வுகள்
மீத்தேன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது , குழாய்வழி மற்றும் கிணறுகளில் இருந்து மீத்தேன் கசிவுகள் ஏற்படாமல் கட்டுப்படுத்துவது அத்துடன் கால்நடை வளர்ப்பு, விவசாயம் போன்றவற்றில் மாற்றம் செய்வதன் மூலம் சாத்தியம். மேலும் பெட்ரோல் வாகன பயன்பாட்டைக் குறைத்து சூரியசக்தி ஆற்றல், காற்றாலை மின் உற்பத்தி போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நம் உலகை மீட்க முடியும் எனக் கருதுகின்றனர் விஞ்ஞானிகள்.