வரும் 28-ம் தேதி பி.எஸ்.எல்.வி – சி 51 ராக்கெட்டை பிரேசில் நாட்டின் அமசோனியா-1 என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது.

இந்த ஆண்டின் முதல் விண்வெளி திட்டமான இது, வரும் 28-ம் தேதி காலை 10.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் மேலும் 21 சிறிய ரக செயற்கைக்கோள்களும் அனுப்பப்படுகின்றன. நியூ விண்வெளி இந்தியா நிறுவனத்தின் என்.எஸ்.ஐ.எல். முதல் வணிக ரீதியான திட்டம் ஆகும். பிரேசில் நாட்டின் அமசோனியா-1 என்ற செயற்கைக்கோள் இதனுடன் அனுப்பப்படுகிறது. இந்த அமசோனியா-1 செயற்கைக்கோள், பூமியை கண்காணிக்கும்.

இது பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளின் நிலை குறித்த துல்லியமான தகவல்களை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய செயற்கைக்கோள்களில் ஆனந்த், சதீஷ்தவான் உள்ளிட்ட செயற்கைக்கோள்களும் அடங்கும். இந்த சதீஷ்தவான் செயற்கைக்கோளை, சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற நிறவனம் தயாரித்துள்ளது. சென்னையில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீசக்தி என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவை தயாரித்த யுனிட்டிசாட் செயற்கைக்கோளும் அதில் இடம் பெற்றுள்ளது. இது மூன்று செயற்கைக்கோளின் கலவை ஆகும்.




