இந்திய ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, கரீபியன் பிரீமியர் லீகில், போட்டிகள் தொடங்கி நடைபெறும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிற்கு ஐபிஎல் போன்று, வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற உள்ளது. ஆறு அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் 33 போட்டிகள் நடைபெற உள்ளன. லீக் சுற்றில் தினமும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நாள்தோறும் சுற்றின் முதல் போட்டி, ஐபிஎல் போட்டி போன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சிபிஎல் போட்டி நடக்க உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் அப்போதைய நேரம் என்பது, காலை 10 மணி ஆகும். காலை நேரத்தில் டி20 போட்டியா? என உள்ளூர் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ள நிலையில் அதற்கு இரு காரணங்கள் கூறப்படுகிறது.
முதல் காரணம் இந்திய ரசிகர்கள் அந்த தொடரை காண ஆர்வம் காட்டுவது. மற்றொன்று கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. அதன் காரணமாக அந்த தொடரில் ஒவ்வொரு நாளும் முதல் போட்டி இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது.
தினமும் இரண்டாவது லீக் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நடைபெறும். போர்ட் ஆஃப் ஸ்பெயின் நேரப்படி மாலை 5.30 மணிக்கு போட்டி நடைபெறும். செப்டம்பர் 10 அன்று இந்த தொடர் முடிவடையும் நிலையில் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் தொடங்க உள்ளது.