பாய்ண்ட் டேபிளை பதம் பார்த்து முதலிடத்தில் நீடிக்கும் சிஎஸ்கே. குவாலிபைர் போட்டிக்குள் தகுதிபெறும் மற்ற அணிகள் எது..?
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19 ம் தொடங்கி வருகிற அக்டோபர் 15 வரை நடைபெற இருக்கிறது.
வருகிற அக்டோபர் 8 ம் தேதியுடன் ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைய உள்ளதால் எந்தெந்த அணிகள் இறுதி போட்டிகளுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2008 ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது முதல் நடப்பு ஐபிஎல் 2021 வரை சென்னை அணி தொடர்ச்சியாக 11 முறை குவாலிபைர் சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 2 தோல்வியுடன் முதல் அணியாக குவாலிபைர் சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளது. சென்னை அணியில் ருதுராஜ் கெய்ட்வாட் மற்றும் டுபிளிசி ஆகியோரின் சிறப்பான தொடக்கமே இதற்கு முக்கிய காரணம்.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் நிலையில், இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் இந்தாண்டும் இந்த அணி குவாலிபைர் சுற்றுக்குள் தகுதி பெறுவது உறுதி.
ஒரு முறை கூட கப் அடிக்காத ராசியில்லாத அணியாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த முறை கப் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக விராட் கோலி இந்தாண்டுடன் பெங்களூர் கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதால் கப் நிச்சயம் பெங்களூருக்கு அடித்து கொடுப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் குவாலிபைர் சுற்றுக்குள் தகுதி பெறும் முனைப்பில் உள்ளது.
4 வது இடத்தில் தான் இங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி தலா 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 மற்றும் 5 இடத்தில் உள்ளனர். இரு அணிகளும் அடுத்து நடைபெற இருக்கும் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி குவாலிபைர் சுற்றுக்குள் தகுதி பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.
மும்பை அணி குவாலிபைர் சுற்றுக்குள் நுழைய வேண்டுமெனில் கடைசி 3 போட்டிகளில் கட்டாய வெற்றியுடன் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டும். அதேபோல், 11 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 மற்றும் 7 இடத்தில் உள்ள பஞ்சாப், ராஜஸ்தான் அணிக்கு எங்கோ ஒரு இடத்தில் ஒளி உள்ளது. இந்த இரு அணிகளும் அடுத்து நடைபெறும் 3 போட்டிகளில் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றிபெற்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மற்ற போட்டிகள் அனைத்திலும் தோல்வியை சந்தித்தால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணியில் ஏதேனும் ஒரு அணி குவாலிபைர் சுற்றுக்குள் தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி கிட்டத்தட்ட ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால், இந்த அணி அடுத்து வரும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் கொல்கத்தா மற்றும் மும்பையின் குவாலிபைர் கனவு காலாவதி ஆகிவிடும்.