எம்.எஸ்.தோனிக்கு எதிராக பந்து வீசி அவரை அவுட் செய்தது நம்ப முடியாத தருணம் என்று வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

அபு தாபி:
கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ள வருண் சக்ரவர்த்தி நேற்றைய போட்டியில் முக்கியமான கட்டத்தில் எம்.எஸ்.தோனியை 11 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.இதுகுறித்து வருண் சக்ரவர்த்தி கூறுகையில் ‘‘3 வருடத்திற்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்திற்குள் அமர்ந்து எம்.எஸ்.தோனியின் ஆட்டத்தை ஒரு ரசிகனாக கூட்டத்தின் நடுவில் இருந்து பார்த்து ரசித்தேன்.
தற்போது தோனியை எதிரில் நின்று பேட்டிங் செய்வதை பார்த்து அவருக்கு நான் பந்து வீசினேன். இது எனக்கு நம்பமுடியாத தருணம்.
ஆடுகளம் மிகவும் சமமாக இருந்தது. இது 180 ரன்கள் அடிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்கும் என்று நினைத்தேன். டோனி சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பந்தை சரியான லெந்தில் பிட்ச் செய்தால் விக்கெட் வீழ்த்த முடியும் என்று நினைத்து திட்டத்தை சரியாக செயல்படுத்தினேன். போட்டி முடிந்த பின்னர் தோனியுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். நான் தமிழில் சொல்ல விரும்பும் ஒரே வார்த்தை தல, தலதான்’’ என்றார்.




