இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டன், இந்தியாவுக்கு அதிக கோப்பைகளை பெற்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார்.

அவரின் இந்த முடிவை அறிந்த ரசிகர்கள் பலர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உலக கிரிக்கெட் இனி ஹெலிகாப்டர் ஷாட்டுகளை இழக்கும் என்று தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அவரது டுவிட்டரில், “இந்திய கிரிக்கெட்டில் தோனியின் ஈடு இணையற்ற பங்களிப்புக்காக, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அவரது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். அவரது கூலான மனோபாவம் அனல் பறக்கும் பல போட்டிகளை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றி உள்ளது. அவரது தலைமையின் கீழ் இந்தியா இரண்டு முறை வெவ்வேறு வடிவங்களில் உலக சாம்பியன்களாக முடிசூட்டப்பட்டது மறக்க முடியாது.
தோனி தனது வித்தியாசமான கிரிக்கெட்டின் மூலம் மில்லியன் கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். அடுத்து வரும் காலங்களில் இந்திய கிரிக்கெட்டை வலுப்படுத்த அவர் தொடர்ந்து பங்களிப்பார் என்று நம்புகிறேன். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்ட அமித்ஷா, உலக கிரிக்கெட் இனி ஹெலிகாப்டர் ஷாட்டுகளை இழக்கும். மகி! (மகேந்திரசிங் தோனி)” என்று பதிவிட்டுள்ளார்.




