தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கேப் டவுன் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பவுமா 5 ரன்னிலும், டி காக் 30 ரன்களிலும் வெளியேறினார்.அடுத்து வந்த டு பிளிசி அரைசதம் அடித்து அசத்த,மறுமுனையில் வான்டர் டுசன் 37 ரன்னும், கிளாசன் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் என்ற இலக்குடன் கமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாற,அடுத்து களமிறங்கிய பேர்ஸ்டவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் 37 ரன் எடுத்து வெளியேற,கேப்டன் இயான் மார்கன் 12 ரன்களில் அவுட்டானார்.இங்கிலாந்து அணி 19.2 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. பேர்ஸ்டவ் 86 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருது பேர்ஸ்டவுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் டி 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.




