இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு ஐசிசி கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஏற்கெனவே இரண்டு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியும், டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் பவுமா தலைமையில் தோல்வியையே சந்திக்காத தென் ஆப்பிரிக்க அணியும் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 20 பந்துகளை சந்தித்து ரன் ஏதுமின்றி ரபாடா வேகத்தில் வீழ்ந்தார். மற்றொருரு தொடக்க ஆட்டக்காரரான லபுஷங்கே 17 ரன்களில் வெணியேறினார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் வழக்கம் போல் நல்ல ஃபார்மில் விளையாடி வர, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 11 ரன்களில் நடையைக் கட்டினார். ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களில் ஆட்டமிழக்க, சற்று அடித்து ஆடிய வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்து ரபாடா வேகத்தில் வீழ்ந்தார். விக்கெட் கீப்பஎ அலெக்ஸ் கேரி 23 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு சுருண்டது.

வேகத்தில் மிரட்டிய ரபாடா 5 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எளிதில் முந்தி விடலாம் என்று எண்ணிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்ரம் 6 பந்துகளை சந்தித்து ரன் ஏதுமின்றியும், ரிக்கல்டன் 16 ரன்களிலும் ஸ்டார்க் வேகத்தில் வீழ, அடுத்து வந்த முல்டர் 44 பந்துகளை சந்தித்து வெறும் 6 ரன்களில் கம்மின்ஸ் வேகத்தில் போல்டாகி வெளியேறினார்.

சற்றுத் தாக்குப்பிடித்த கேப்டன் பவுமா 36 ரன்களும், பெடிங்ஹாம் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க தென் ஆபிரிக்க அணி 57.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு சுருண்டது.
இதனையடுத்து 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினர். அதிகபட்சமாக மிட்சல் ஸ்டார்க் 58 ரன்களும் அலெக்ஸ் கேரி 43 ரன்களும் எடுக்க 65 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் வேகத்தில் மிரட்டிய ரபாடா 4 விக்கட்டுகளும், லுங்கி இங்கிடி 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் 282 ரன்களை இலக்காகக் கொண்டிப்இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டர்கள் மிகவும் நிதானமாகவும், மிக மிக கவனத்துடனும் விளையாடினர். மெதுவாக ஆடினாலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினர். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடினார்.
ரிக்கல்டன் 6 ரன்னிலும், முல்டர் 27 ரன்களிலும் ஆட்டமிழக்க கேப்டன் டெம்பா பவுமா மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கவனத்தோடு நிதானமாக ஆடிய கேப்டன் பவுமாவிற்கு தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட அதையும் பொருட்படுத்தாமல் அரை சதம் கடந்தார். 66 ரன்களில் பவுமா ஆட்டமிழக்க சிறப்பாக ஆடிய மார்க்ரம் சதம் கடந்து அசத்தினார்.

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவையாக இருந்த போது, 136 ரன்கள் எடுத்திருந்த மார்க்ரம் ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 83.4 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
ஆட்டநாயகனாக மார்க்ரம் தேர்வு செய்யப்பட்டார். கடசியாக 1998ஆம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்க அணி 27 ஆண்டுகள் கழித்து தற்போது தான் வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக டெம்பா பவுமா பொறுப்பேற்ற பிறகு தோல்வியையே சந்திக்காமல் ஒரு டிரா, 8 வெற்றியுடன் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார் தென் ஆப்பிரிக்க கருப்பர் இனத்தவரான டெம்பா பவுமா.

வரலாற்று வெற்றியைப் பெற்ற தென் ஆப்பிரிக்க அணியினரையும், கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் டெம்பா பவுமாவையும் கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.