மக்கள் அனைவரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலே மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என மதிமுக இணையதள அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மினர்வா ராஜேஷ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் 72 சுங்கசாவடிகளை 90 சுங்கசாவடிகளாக உயர்த்த போவதாக கடந்த ஐனவரி மாதம் ஒன்றிய அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியான நிலையில் அது குறித்த கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காகவும், சுங்கச்சாவடிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக மனு அளித்துள்ளார்.

“சுங்கச் சாவடிகள் தொடர்பாக மதிமுக இணையதள அணி தொழில்நுட்ப ஆலோசகர் தம்பி உதயகுமாரும், நானும் தகவல் அறியும் உரிமை சட்டம் ( RTI) வாயிலாக தேசிய நெடுஞ்சாலை துறையிடம் மனு அளித்து இருந்தோம். புதிதாக எந்தெந்த ஊர்களுக்கு புதுச் சுங்கசாவடிகள் வர இருக்கிறது என்ற தகவலை தம்பி உதயகுமார் வாங்கினார். ஏற்கனவே இருக்கும் சுங்கசாவடிகளின் குத்தகை காலம் எப்போது முடிவடைகிறது என்பது குறித்த தகவலை நான் வாங்கி இருக்கிறேன். அதிலும் 34 சுங்கசாவடிகள் குறித்த தகவல்களே கிடைத்துள்ளது. மீதம் உள்ள 38 சுங்கசாவடிகளின் குத்தகை கால விவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அதையும் கேட்டு இருக்கிறோம்.

இதன் மூலமாக தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த சுங்கசாவடிகள் எங்கு இருக்கின்றன, அதன் குத்தகை கால நிலை குறித்தும் அறிந்து கொள்ள இயலும். அதிகாரபூர்வமாக 72 இடங்களை தவிர வேறு எங்கேனும் சுங்கசாவடிகள் இருக்கிறதா என்பதையும் அறிந்து கொள்ள இயலும். புதிய சுங்கசாவடிகள் அமைக்க கூடாது என்பதற்கு ஆதாரமாகவும் இந்த தகவல்களை வைத்து நாம் முன்முயற்சிகளை எடுக்க இயலும்” எனத் தமது முகநூல் பக்கத்தில் மினர்வா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதிமுகவினருக்கு மட்டும் அல்ல, பொதுமக்களுக்கும் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் இதை இங்கு பதிவிடுகிறோம். நம் அடிப்படை உரிமைகள் சார்ந்த அரசின் அனைத்து திட்டங்கள் குறித்தும் RTI மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்து இருப்பது அவசியம். நம் பகுதிகளில் நடைபெறும் அனைத்து அரசு திட்டங்கள் குறித்தும் RTI மூலமாக நாம் முழு விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். அனைவரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினாலே மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
அண்ணன் துரை வைகோ அவர்களுடன் பயணிப்பது என்பது வெறும் சராசரி அரசியல் ஆக இல்லாது சமூக சிந்தனையோடு மக்களுக்காக பயணிப்பது என்ற அடிப்படையின் விளைவுதான் இதுபோன்ற செயல்களை முன்னெடுத்து வருகிறோம் எனவும் மினர்வா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.