ஆசிய கோப்பை டி20 தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 192 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும், விராட் கோலி 59ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது ஹாங்காங் அணி சார்பில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு பரிசு வழங்கப்பட்டது. இதுகுறித்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, ஹாங்காங் அணி சார்பில் கோலிக்கு ஒரு ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. அதில், “விராட் கோலி நீங்கள் பல தலைமுறை வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதற்கு எங்களுடைய நன்றி.நாங்கள் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம். அடுத்து நிறைய நல்ல நாட்கள் உங்கள் கிரிக்கெட் பயணத்தில் இடம்பெறவுள்ளது. அன்பும் ஆதரவுடன் ஹாங்காங் அணி” என்று எழுதப்பட்டுள்ளது. இது ஒரு இனிமையான பரிசு என்று கூறியுள்ள கோலி, தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கோலியின் பார்ம் குறித்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று அவர் அரைசதம் அடித்தது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




