வார்னர் மற்றும் சஹாவின் அதிரடி அரைசதத்தால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று 4 வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஹைதராபாத் அணி வாழ்வா? சாவா ? போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்தில் இருந்து அடுத்தடுத்த விக்கெட்களை இழக்க,ஒரு முனையில் போராடி பொல்லார்ட் மட்டும் மும்பை அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார்.அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரில் 41 ரன்களில் பொல்லார்ட் அவுட் ஆகி நடையைக்கட்டினார்.20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 3 விக்கெட்களும்,ஹோல்டர் மற்றும் நதீம் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
150 ரன்கள் என்ற இலக்குடன் கேப்டன் வார்னர் மற்றும் சஹா ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் இருவரும் ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர்.தொடர்ந்து வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி அரை சதம் கடக்க,மறுமுனையில் விருத்திமான் சஹாவும் அரை சதம் கடந்தார்.17.1 ஓவர்களிலேயே ஹைதராபாத் அணி வெற்றி எண்ணிக்கையை விரட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய வார்னர் 85 ரன்களுடனும்,சஹா 58 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத் அணியில் 4 ஓவர் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய நதீம்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
மும்பை மற்றும் டெல்லி அணிகள் முதல் தகுதி போட்டிக்கான மோதலில் நவம்பர் 5 ம் தேதி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெரும்.
இந்த வெற்றியின் மூலம் ஹைராபாத் அணி 4 வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று நவம்பர் 6 ம் தேதி பெங்களூர் அணிக்கு எதிராக எலிமினேட்டர் சுற்றில் விளையாட உள்ளது.