ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், அதிரடியாக ஆடிய டெல்லி அணி ரன்களை குவித்தது.
ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், டெல்லி அணியின் தொடக்க ஜோடியான தவான்- பிருத்வி ஷா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கினர். பாட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, நரைன், நாகர்கோட்டி என அனைவரது ஓவர்களிலும், பந்து நாலாபுறமும் சிதறடிக்கப்பட்டது. இதனால் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் எனும் விதத்தில் ரன் ரேட் எகிறியது.
2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 26 ரன்களை குவித்த ஷிகர் தவான், வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் வெளியேறினார். மறுபுறம் அதிரடி காட்டிய ப்ரித்வி ஷா தன் பங்கிற்கு 4 பவுண்டரி மற்றும் 4 சிகசர்களுடன் 41 பந்துகளில் 66 ரன்களை குவித்து நாகர்கோட்டி பந்து வீச்சில் வெளியேறினார். இதனால் டெல்லி அணி, 13 ஓவர்களுக்கு 130 ரன்களை குவித்தது.
தொடர்ந்து, 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்-ரிஷப் பந்த் இணை , ரன் ரேட் வேகத்தை குறையவிடாமல் ரன் குவிக்க தொடங்கினர். ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிக்சர், பவுண்டரிகளுக்கு விரட்டி வான வேடிக்கை காட்டினார்.
ரிஷப் பந்த் 17 பந்துகளுக்கு 38 ரன்களை குவித்து வெளியேற, 7 பவுண்டரி மற்றும் 6 சிகசர்களுடன் ஸ்ரேயாஸ் அய்யர் 88 ரன்களை குவித்தார். இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரசல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.