ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 194 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ராணா 81 ரன்களையும், நரைன் 64 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அதிர்ச்சி அளித்தனர். பாட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரகானே டக் அவுட் ஆகி வெளியேறினார். கடந்து நான்கு போட்டிகளில் இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்கள் விளாசி அதிரடி காட்டிய தவானும் 6 ரன்களில் பாட்டின்ஸ் வேகத்தில் நடையை கட்டினார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த, ஸ்ரேயாஸ் அய்யர் – பண்ட் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொறுப்புடன் ஆடிய பண்ட் 27 ரன்களிலும், அய்யர் 47 ரன்களிலும் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து வந்த ஹெட்மேயர் 10 ரன்களிலும், ஸ்டோயனிஷ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களிலும் சக்ரவர்த்தி பந்துவீச்சில் நடையை கட்ட, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் மிரட்டினார்.
சரிவில் இருந்து மீள முடியாத டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே எடுத்து தொடரில் நான்காவது தோல்வியை பதிவு செய்தது.