ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ள இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.
பத்து அணிகள் பங்கேற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடரில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

இதில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான முதல் குவாலிபயர் ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்திய பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை வெளியேற்றிய மும்பை அணி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிபயர் போட்டி அகமதாபாத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஆனால் அகமதாபாத்தில் மழை பெய்வதற்கு 40% வரை வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி கைவிடப்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. அவ்வாறு மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
இறுதிப்போட்டி வரும் மூன்றாம் தேதி இதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.




