ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.இதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று அதிகாலை துபாய் சென்றடைந்தனர்.
செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.இதற்காக ஒவ்வொறு அணியினரும் துபாய் சென்றுக் கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள் நாடுகளில் இருந்து நேரடியாக துபாய் வந்து விடுவார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நேற்று துபாய் சென்றடைந்தார். அவர் புர்ஜ் கலிஃபாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் அணியுடன் இணைவார்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று அதிகாலை துபாய் சென்றடைந்தனர்.அவர்கள் நேராக சொகுசு ஓட்டல் சென்று அங்குள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் பாதுகாப்பிற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொகுசு ஓட்டலில் 150 அறைகளை பதிவு செய்து வைத்துள்ளது.