ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பரவலுக்கு மத்தியிலும், பல்வேறு நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று துபாயில் நடைபெற உள்ள லீக் போட்டியில், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.
இந்திய நேரப்படி இரவு 07.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் மோதியதில், பெங்களூர் அணி அதிகபட்சமாக 15 போட்டிகளில் வெற்றி பெற, டெல்லி 7 போட்டிகளிலும், ஒரு போட்டியில் முடிவு தெரியாமல் நிறைவடைந்தது. நடப்பு தொடரில், பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிலும், டெல்லி மற்றும் பெங்களூர் வலுவான அணிகளாக உருவெடுத்துள்ளன. விளையாடிய 4 போட்டிகளில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள், தலா 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 2 மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளன.
டெல்லி அணியை பொறுத்தவரையில், ஷிகர் தவான் பொறுப்பாக ஆடினாலும், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், ஸ்ரேயாஸ் அய்யர், பிருத்வி ஷா ஆகியோர் ரன் மழை பொழிந்தனர். அவர்களை தாண்டியும் டெத் ஓவர்களில் ஆட்டத்தை முடித்து வைக்கக் கூடிய ஸ்டோய்னிஷ், ஹெட்மயர் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளதால், பேட்டிங் வலுவாக உள்ளது.
பந்துவீச்சில், ரபாடா மற்றும் நோர்ட்ஜே ஆகியோர் வேகப்பந்தில் அசத்தி வருகின்றனர். கொல்கத்தா அணிக்கு எதிராக, ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் மார்கன் திரிபாதி அந்த இரண்டு, பவுலர்களை அடித்தாலும் கூட, இந்த போட்டியில் அதற்கு வாய்ப்பு இருக்காது என கூறலாம். அஷ்வின் மற்றும் மிஸ்ரா போன்ற அனுபவம் வாய்ந்த, சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது, ஷ்ரேயாஸின் இளம் டெல்லி படைக்கு கூடுதல் வலுவாக உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கலாம்.
பெங்களூர் அணி கடந்த சில சீசன்களை காட்டிலும், இந்த முறை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முழுமையாக சரியான கலவையில் அமைந்த அணியாக உள்ளது. தொடக்க வீரர்கள் பின்ச்-தேவ்தத் ஜோடியில், நல்ல தொடக்கத்தை வழங்கி வருகிறது. தேவதத் விளையாடிய 4 போட்டிகளில் 3 அறைசாதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலியம் கடைசி போட்டியில் 72 ரன்களை குவித்து அசத்த, டெவிலியர்ஸ் வழக்கம்போல் பினிஷிங் வேலையை சிறப்பாக செய்து வருவதால், பெங்களூர் அணி வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது.
சீசன் தொடக்கத்தில் பந்துவீச்சில் சற்று தடுமாறினாலும், சைனி மற்றும் உடானாவின் வருகை அணியின் வேகப்பந்து வீச்சை வலிமையாக்கியுள்ளது. சுழற்பந்தில் சஹால் எதிரணியை மிரட்ட, ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பவர்பிளேயில் ரன்ரேட் வேகத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருந்தாலும், மோசமாக உள்ள ரன்ரேட் விகிதத்தை மாற்றி அமைக்கும் வகையில் இன்றைய போட்டியில் பெரிய வெற்றியை இலக்காக கொண்டு பெங்களூர் அணி செயல்பட உள்ளது. இதனால், இன்றைய போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.