இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொரோனா பரவலை தொடர்ந்து நடைபெற்ற முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடைரை ஏற்கனவே இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், சவுத்தாம்டனில் உள்ள ஏஜியஸ் பவுலில் 3வது போட்டி நேற்று நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்த்தில், 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து, கேப்டன் இயான் மோர்கனின் அபார சதத்துடன் (106), பாண்டன் (58), டிஜே வில்லே (51), டாம் கரன் (38) ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் 49.5 ஓவர்களில் 328 ரன்கள் எடுத்து அந்த அணி ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து, 329 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி வெற்றி பெறாது எனவே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், மைதானத்தில் ஸ்விங் எடுபடாததால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அயர்லாந்து வீரர்களால் புரட்டி எடுக்கப்பட்டனர். அயர்லாந்து அணியில் தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் 128 பந்துகளில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 142 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக கேப்டன் பால்பர்னி 112 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுதார். இந்த ஜோடி மட்டும் 214 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான ஆட்டத்தில் 49.5 ஒவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அந்த அணி அபார வெற்றி பெற்றது.
2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் இதே இலக்கை, கெவின் ஒ பிரையனின் 50 பந்துகளில் அடிக்கப்பட்ட சத்ததால் அயர்லாந்து சேஸ் செய்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங்கும், தொடர் நாயகனாக டேவிட் வில்லேயும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த தொடரானது அயர்லாந்து அணிக்கு 2023ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்ன தகுதிச் சுற்றில் ஒன்றாகும். இந்நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்று இருப்பது அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.