ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மா இந்திய அணியில் இடம்பெற மாட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் கேப்டனாகவே நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நவம்பர் 27-ம் தேதி தொடங்குக, டெஸ்ட் போட்டிகளுடன் ஜனவரி 19ம் தேதி இந்திய சுற்றுப்பயணம் நிறைவடைகிறது.
ஆஸ்திரேலியா தொடருக்கான அணியை பிசிசிஐ வெளியிட்ட போது, எந்த போட்டியிலும் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்ற நிலையிலும் அணியில் ஏன் சேர்க்கப்படவில்லை என, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இந்நிலையில் அனுஷ்கா சர்மா – விராட் கோலி தம்பதிக்கு ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ குழந்தை பிறக்க இருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3,4-வது டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. பிரசவ சமயத்தில் மனைவியுடன் இருக்க விராட் கோலி பிசிசிஐ-யிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் ஏற்கனவே, மும்பை அணியின் கடந்த இரண்டு போட்டிகளிலும் களமிறங்கி தான் முழு உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்துள்ள ரோகித் சர்மா அணியில் நிச்சயம் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. கோலி இல்லாத சமயத்தில் அவரது இடத்தில் அனுபவம் வாய்ந்த விரர் ஒருவர் அவசியம் வேண்டும் என்பதால், ரோகித் சர்மா அணியில் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. மேலும், தொடக்கத்தில் ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, டி20 போட்டிகளில் அவர் களமிறங்குவார் எனவும், இந்திய டெஸ்ட் அணிக்கு கடைசி இரண்டு போட்டிகளில் அவர் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.