ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்த லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 61வது ஆட்டம் லக்னோவில் இன்று நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி லக்னோ அணிக்காக துவக்க ஆட்டக்காரர்களாக மிட்சல் மார்ஷும், எய்டன் மார்க்கரமும் களமிறங்கினர்.
பேட் கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டிய மிட்சல் மார்ஷ், நான்காவது பந்தை சிக்சருக்கு விரட்டி லக்னோ அணியின் ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் மிட்சல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்கரம் ஆகியோர் இணைந்து இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என 17 ரன்களை குவித்தனர். பவர் பிளேவான முதல் ஆறு ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்களைக் குவித்து அசத்தியது. இது ஐபிஎல் தொடர்களில் லக்னோ மைதானத்தில் பவர் பிளேவில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் ஆகும். கடந்த ஆண்டு லக்னோ அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 70/1 என அடித்திருந்ததே தற்போது வரை இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.
அதிரடியாக விளையாடிய மிட்சல் மார்ஷ் 28 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். லக்னோ அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது. அணியின் ஸ்கோர் 115 ரன்களை எட்டிய போது, மிட்சல் மார்ஷ் ஹர்ஷ் துபே சுழலில் இஷன் மலிங்காவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மிட்சல் மார்ஷ் 39 பந்துகளில் நான்கு சிக்சர் ஆறு பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பண்ட், 6 பந்துகளில் 7 ரன்களில் நடையைக் கட்ட, மார்க்கரம் 28 பந்துகளில் அரை சதம் கடந்து அதிரடியாக ஆடி வந்தார். 38 பந்துகளில் 4 சிக்சர் 4 பவுண்டரிகளுடன் 61 ரன்களில் ஹர்ஷல் பட்டேல் பந்தில் மார்க்கரம் ஆட்டமிழந்தார். இது ஹர்ஷல் பட்டேலுக்கு 150வது ஐபிஎல் விக்கெட்டாகும். மேலும் ஐபிஎல்லில் குறைந்த பந்துகளில் (2381 பந்துகளில்) 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் ஹர்ஷல் பட்டேல் படைத்தார். அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரண் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் மலிங்கா 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 206 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டைட் 9 பந்துகளில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, அதிரடியாக விளையாடினார். அவர் 20 பந்துகளில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் 28 பந்துகளில் 35 ரன்களும் கிளாசன் 28 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கமிந்து மெண்டிஸ் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் லக்னோ மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். லக்னோ அணி சார்பில் திக்வேஷ் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹைதராபாத் அணியின் அபிஷேக் ஷர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஹைதராபாத் அணி பிளே ஆஃப் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட நிலையில் தற்போது லக்னோ அணியும் இந்த தோல்வியின் வாயிலாக தனது பிளே ஆஃப் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளது.
இன்று டெல்லியில் நடைபெறும் 62வது போட்டியில் ராஜஸ்தான் அணியும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் மோத உள்ளன.




