மும்பை அணியில் டி காக் அதிரடி அரைசதத்தால் ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்காக மும்பை அணி வழங்கியது.

ஷார்ஜாவில் நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து தொடக்க வீரர்களாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா,டி காக் களம் இறங்க,சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் அடித்து, அதே ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.அதன் பிறகு டி காக்வுடன் இணைந்த சூர்ய குமார் யாதவ் அடுத்தடுத்த ஓவர்களில் பௌண்டரிகளை தெறிக்கவிட,மறுமுனையில் டி காக் ரன் அடிக்க தொடங்கினார்.
சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டு இருந்த சூர்ய குமார் யாதவ்(27 பந்துகள்,18 ரன்கள்)சித்தார்த் வீசிய 6 வது ஓவரில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.அதிரடியை தொடர்ந்த டி காக் 31 பந்துகளில் அரைசதத்தை கடக்க,12 ஓவர் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து இருந்தது.ரஷித் கான் வீசிய 13.1 வது ஓவரில் டி காக்(67 ரன்கள்,39 பந்துகள்) தூக்கி அடித்து அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அதே ஓவர் அடுத்த பந்தே இஷான் கிஷன் ஒரு இமாலய சிக்ஸர் அடித்து நொறுக்கினார்.அடுத்து களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா சந்தீப் சர்மா வீசிய 15 வது ஓவரில் ஒரு சிக்ஸர்,ஒரு பௌண்டரி அடித்து அசத்த,அதே ஓவரில் இஷான் கிஷன்(31ரன்கள்,23பந்துகள்) சிக்ஸர் அடிக்க முயற்சித்து மனிஷ் பாண்டேவின் சிறப்பான கேட்ச்சால் வெளியேறினார்.16 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து இருக்க,ஹர்திக் பாண்டியா உடன் இணைந்த பொல்லார்ட் சந்தீப் சர்மா வீசிய 18 வது ஓவரில் 2 சிக்ஸர்களை தெறிக்கவிட்டார்.
இருவரும் அதிரடியை தொடர 19 ஓவர் முடிவில் 187 ரன்கள் எடுத்து இருந்தது மும்பை அணி.கடைசி ஓவர் போட வந்த கௌல் ஹர்திக் பாண்டியாவை(28 ரன்கள்,19 பந்துகள்) கிளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.அடுத்து களம் இறங்கிய குர்னால் பாண்டியா 4 பந்துகளில் 20 ரன்கள் அடித்து அசத்த,மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்காக வழங்கியது.



