ரயில்வேதுறையில் டிக்கெட் செக்கராக இருந்து, கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டனாக உருவெடுத்த மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் மூலம் இதுவரை சுமார் 700 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று சிட்டகாங்கில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தோனி முதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்கினார். போட்டியில் 7-வது வீரராக களமிறங்கிய தோனி ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார்.
ஆனால், அவரது அதிரடி ஆட்டம் மற்றும் கடும் முயற்சியின் மூலம் 16 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு சுமார் 786.53 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவர் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 6 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமானவர், கடந்த 2018 ஆம் ஆண்டில் ரூ.15.71 கோடிக்கு கையெழுத்திட்டார். தோனி தனது ஐபிஎல் பயணத்தில் 13 ஆண்டுகளில் மொத்தம்137.8 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். 2015ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழின் பட்டியலில் உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் 23 வது இடத்தை தோனி பிடித்து இருந்தார்.
தனிப்பட்ட முறையில், ஸ்போர்ட்ஸ்ஃபிட் என்ற பெயரில் நாடு முழுவதும் சுமார் 190 ஜிம்களை அவர் வைத்திருக்கிறார். ஜார்க்கண்டில் ஹோட்டல் மஹி ரெசிடென்சி என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். விளையாட்டு ஆடைகளை விற்கும் செவன் என்ற நிறுவனத்தையும் அவர் நடத்துகிறார்.
ராஞ்சியில் 7 ஏக்கர் அளவில் சகல வசதிகளுடன் கூடிய பார்ம் அவுஸ் ஒன்றை அமைத்துள்ளார். பைக் பிரியரான தோனி உயர் ரக பைக்குகள் மட்டுமின்றி, ஆடி q7 முதல் ஹம்மர் கார் வரையில் பயன்படுத்தி வருகிறார். இந்தியா சிமெண்ட் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள தோனி, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விளம்பர துதாராகவும் உள்ளார்.
16 ஆண்டுகால தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நேற்றுடன் முடிவடைந்தாலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றது மட்டுமின்றி தனக்கான ஒரு வளமான வாழ்க்கையையும் தோனி அமைத்துக் கொண்டுள்ளார்.