டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதி போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது.
இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஸ்டோனிஸ் மற்றும் தவான் களமிறங்கினர்.போல்ட் வீசிய முதல் ஓவர் முதல் பந்தே ஸ்டோனிஸ் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து முட்டை ரன்களில் வெளியேற,அடுத்து வந்த ரஹானேவும் 2 ரன்களில் வெளியேறினார்.
4 வது ஓவர் வீசிய ஜெயந்த் யாதவ் பந்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தவான் 15 ரன்களில் கிளீன் போல்ட் ஆக,அதன் பிறகு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் கூட்டணி சிறப்பாக ஆடி தலா அரை சதமடித்து அசத்தினர்.தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரிஷப் பண்ட் 15 ஓவர் வீசிய கோல்டர் நைல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.அடுத்தடுத்து டெல்லி அணி 3 விக்கெட் இழந்து தடுமாற,ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களும்,ரிஷப் பண்ட் 56 ரன்களும் எடுத்து இருந்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 3 விக்கெட்களும்,கோல்டர் நைல் 2 விக்கெட்களும்,ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.
158 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி காக் தொடக்க வீரர்களாக உள்ளே வந்தனர்.இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்தி அசத்த,மும்பை அணியின் ஸ்கோர் 4 ஓவர் முடிவில் 40 ரன்களை கடந்தது.ஸ்டோனிஸ் வீசிய 5 ஓவர் முதல் பந்தே டி காக்கை(20 ரன்கள்,12 பந்துகள்) அவுட் செய்து வெளியேற்ற,அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடிய பொழுதும் ரோஹித் சர்மாவின் தேவை இல்லாத அழைப்பால் 20 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 50 ரன்களை கடந்து அசத்தினார்.
இஷான் கிஷன் உள்ளே தன் பங்கிற்கு 2 பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து நொறுக்க,நோர்கியா வீசிய 17 வது ஓவரில் ரோஹித் சர்மா(68 ரன்கள்,49 பந்துகள்) தூக்கி அடிக்க முயற்சித்து லலித் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.பின்னர் களமிறங்கிய பொல்லார்ட் அடுத்தடுத்து இரண்டு பௌண்டரிகளை அடித்து ரபடா வீசிய அடுத்த ஓவரில் கிளீன் போல்டானார்.12 பந்துகளில் 3 ரன்கள் மும்பை அணிக்கு தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா ஒரு ரன் அடித்து அவுட் ஆக,இஷான் கிஷன் மற்றும் குர்னால் பாண்டியா ஓடி ரன்கள் எடுத்து மும்பை அணியை வெற்றி பெற செய்தனர்.மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது.
மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 68 ரன்களும்,இஷான் கிஷன் 33 ரன்களும் அதிகபட்சமாக பெற்று இருந்தனர்.
டெல்லி அணியில் நோர்கியா 2 விக்கெட்களும்,ரபடா மற்றும் ஸ்டோனிஸ் தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.
3 விக்கெட்களை கைப்பற்றிய போல்ட்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஐ.பி,எல் 2020 தொடரில் 670 ரன்கள் அடித்து கே.எல்.ராகுல் ஆரஞ்சு நிற தொப்பியையும்,ரபடா 30 விக்கெட்களையும் கைப்பற்றி ஊதா நிற தொப்பியையும் பெற்றனர்.