இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி டி-20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. வார்ம் அப் போட்டியில் இங்கிலாந்து Vs இந்தியா அணிகள் மோதின டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், ஜாசன் ராய் இருவரும் களமிறங்கினர்.
மூன்றாவது ஓவரில் ஷாமியின் பந்துவீச்சில் 18 ரன்களில் பட்லர் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்த சில நிமிடங்களில் ஜாசன் ராய் 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.பின்னர் நிதானமாக விளையாடிய மொயீன் அலி மற்றும் ஜானியின் கூட்டணி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
அதிகபட்சமாக மொயீன் அலி 43 ரன்கள் மற்றும் ஜானி 49 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் ஷாமி 3, பும்ரா 1, ராகுல் சாஹர் 1 விக்கெட்டை கைப்பற்றினர். 189 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் கே.எல் ராகுல் 23 பந்தில் அரை சதம் விளாசினார். அதில் 6 பவுண்டரிகளும்,3 சிக்சர்கள் அடங்கும். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி வந்த வேகத்தில் 11 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் 70 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இறுதியாக இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ரிஷப் பண்ட் 29* ஹர்திக் பாண்டியா 12* ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தனர்.