கொரனோ தொற்று உள்ளதால், நாம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த மாற்று வழிகளை கண்டறிய வேண்டும் என்று டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.
32 ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ல் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கான கவுண்ட்டவுன் 2017 ல் தொடங்கியது. ஆனால், கொரனோ தொற்று உலகம் முழுவதும் பரவியதால் குறித்த நேரத்தில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியாமல் போனது. ஆகவே, 2020 க்கான ஒலிம்பிக் போட்டிகளை இந்த வருடம் நடத்த ஜப்பான் முடிவு செய்தது.
இதுபற்றி டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் தலைவர் யோஷிரோ மோரி, ”ஒலிம்பிக் போட்டிகள் கண்டிப்பாக நடைபெறும். கொரனோ தொற்று உள்ளதால் மாற்று வழிகளை கண்டறிந்து போட்டிகளை நடத்த வேண்டும். மாற்று வழிகளை கண்டறியும் போது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் பிரச்சனைகள் ஏற்பட்டதையும் தாண்டி நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
கொரனோ தொற்று பரவியதன் காரணமாகவே ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஜப்பானிலும் கொரனோ வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை. சில இடங்களில் கொரனோ தொற்று உச்சம் பெற்று அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்த ஆண்டும் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்த தவறவில்லை.