இணையத்தில் பிரபலமான மீம் கன்டன்டரை கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புரமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. தொடரின் முதல்போட்டி இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 3.30 மணியளவில் தொடங்க உள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் டவுன்டனில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் மோசமான ஆட்டத்தால் அந்த அணி தோல்வியுற்றது. போட்டியின் போது பவுண்டரி லைன் அருகே வந்த ஒரு எளிமையான கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர் நழுவ விட்டார். அந்த விக்கெட்டை ஆவலாக எதிர்பார்த்த, மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கடுப்பாகி அதீத கோபத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
மொட்டை தலை, ஜெர்க்கின், கட்டம் போட்ட சட்டை அணிந்தபடி இடுப்பில் கை வைத்துக் கொண்டு செம கடுப்பாக நின்றிருந்த சரிம் அக்தர் என்பவரது புகைப்படம் மீம் கிரியேட்டர்களின் ஆல்-டைம் கன்ட்டன்டாக மாறிப்போனது.
இந்நிலையில் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியினரை ஊக்குவிக்கும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் மீம் சரிம் அக்தரை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் காணப்பட்ட அதே மாதிரியான உடையில் இருக்கும் அவர், பெருமையுடனும் ஆர்வத்துடனும் விளையாடுங்கள் என பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு வலியுறுத்தி உள்ளார். மேலும், ஸ்டம்பிற்கு வெளியே ஆப் சைடில் வீசப்படும் பந்துகளை விளையாடுவதை தவிருங்கள் எனவும் அறிவுரை வழங்கி உள்ளார். இந்த வீடியோவை பலரும் ஆன்லைனில் பகிர்ந்து அவரது மீம் மூலமாகவே பலர் கிண்டலடித்து வருகின்றனர்.