அருந்ததி படத்தில் அனுஷ்காவை பாடாய்படுத்துவான் ஒரு வில்லன். இந்த கொடூர வில்லனை நம் வாழ்க்கையில் பார்க்கக்கூடாது என என்னும் அளவுக்கு அவன் மிரட்டும் காட்சிகள் அரங்கையே நடுங்கவும், கோவம் வரவும் வைக்கும். ஆனால் இந்த கொடூரன் தான் இன்று மக்களின் ஹீரோ. அவர் தான் சோனு சூட்…..

சமூக ஊடகங்களில் எங்கு பார்த்தாலும், எனக்கு பணம் கொடுத்து உதவியது சோனு சூட் தான், எனக்கு இந்த கடையை வைத்துக்கொடுத்தது சோனு சூட் தான், என்னை பத்திரமாக அழைத்து வைத்தது சோனு சூட் தான் என்ற வாசகங்களும், புகைப்படங்களும் தான்.
ஊரடங்கால் திக்கு தெரியாமல் தவித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஆபத்பாந்தவனாக மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை தனது சொந்த நிதியில் செய்து வருகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட். அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகளை தனி ஒரு ஆளாக செய்து, தனது உயர்ந்த எண்ணத்தையும், தாராள மனதையும் உலகமறியச் செய்துள்ளார் இவர். குரலற்றவர்களின் குரலாகவும், ஆதரவற்றவர்களின் அரணாகவும் செயல்படுகிறார், சோனு சூட்.
யார் இந்த சோனு …
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இந்த சோனுவின் தாய் ஒரு ஆசிரியை, அப்பா தொழில் அதிபர். நடிப்பின் மீது தீராத ஆசை கொண்ட அவர் தனது படிப்பை முடித்து விட்டு வாய்ப்புக்காக மும்பை வந்தார். அவருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தது தமிழ் திரையுலகம் தான். 1999 ம் ஆண்டு வெளியான கள்ளழகர் படித்தில் தான் அறிமுகமானார் சோனு சூட். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த அவர் சில படங்களையும் தயாரித்துள்ளார். சோனு சூட்டுக்கு இருக்கும் இந்த கதை போன்று அனைத்து நடிகர்களுக்கு ஒரு கதை இருக்கும். ஆனால் அதையும் தாண்டி சோனுசூட் பற்றி நாம் செல்ல வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.

நடித்தோமா, பணம் சம்பாதித்தோமா என்ற நடிகர்கள் சென்றுவிடும் நிலையில் இவர் மட்டும் செய்து வரும் காரியங்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சோனு சூட் நலிவடைந்த மக்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்து வந்த நிலையில், அவரின் உதவிக்கரம் என்னவென்று உலகறிய செய்தது இந்த கொரோனா காலத்தில் தான். ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் தவித்து வந்த நிலையில், அவர்களுக்கு ஒற்றை நபரை உதவினார் சோனு சூட். அவர்களுக்காக பேருந்துகள், ரயில்கள் ஏன் விமானத்தை கூட ஏற்பாடு செய்து கொடித்தார் இந்த ரியல் ஹீரோ.

மும்பையில் தவித்த தொழிலாளர்கள் இவரின் உதவியால் விமான மூலம் டெல்லி வந்து இறங்கியபோது சோனு ஜிந்தாபாத், சோனு சூட் மகாத்மா என மகிழ்ச்சி முழக்கமிட்டனர். பசிப் பட்டினியுடன் பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்த புலம் பெயர் தொழிலாளர்களை ஒரு அரசே கண்டுகொள்ளாத போது ஒரு தனி நபர் நீட்டிய உதவிக்கரங்கள் அனைவரும் புருவம் உயர்த்தி பார்க்க வைத்தது.
சோனு சூட் உதவியால் மட்டும் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்து ஊர் திரும்பியுள்ளனர். கிரிகிஸ்தான் நாட்டில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை நாடுக்கு அழைத்து வர ஏற்பாடும் செய்தார் சோனு. ஒரு அரசால் கூட செய்ய முடியாததை செய்து அசத்தி காட்டியிருக்கிறார் இந்த உயர்ந்த மனிதர். இது மட்டும் அல்ல கொரோனா நோயாளிகளை காப்பாற்ற பாடுபடும் மருத்துவ பணியாளர்கள் தங்கி ஓய்வெடுக்க தனது ஓட்டலையும் கொடுத்துள்ளார்.

ட்விட்டரில் அவரை டேக் செய்து யார் உதவி கேட்டாலும் அடுத்த நிமிடமே தான் உங்களுக்கு இருக்கிறேன் என ஆறுதல் வார்த்தைகளுடன் உதவியும் செய்கிறார் சோனு.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி என்ற பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் இந்த கொரனோ ஊரடங்கு காரணமாக தனது நிலத்தை உழுவதற்கு கூட காசில்லாமல் தவித்துள்ளார். அவரிடம் உழுவதற்கு வாடகைக்கு காளை மாடுகள் வாங்க கூட சுத்தமாக காசே இல்லை.
வேறுவழி இல்லாமல் தனது நிலத்தை உழுவதற்காக தனது இரண்டு மகள்களையும் உதவிக்கு அழைத்து மனைவி மகள்களுடன் தானு சேர்ந்து தானும் நிலத்தை உழுதார். அவருடைய இரண்டு மகள்களும் தள்ளாடி தள்ளாடி உழுதுகொண்டு வர, அவருடைய மனைவி பின்னால் விதைகளை தூவி வந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட் உடனடியாக நாளை காலையே அந்த விவசாயி வீட்டின் முன் இரண்டு காளைகள் நிற்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த இரண்டு பெண் குழந்தைகளின் படிப்புக்கும் தான் முழு பொறுப்பு என்றும் கூறியுள்ளார். மேலும் விவசாயம் நமது நாட்டின் பெருமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகள்களின் உதவியால் நிலத்தை உழுத விவசாயிக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தனது மகனுக்கு ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மாட்டை விற்று செல்போன் வாங்கிக்கொடுத்தார். இந்த செய்திகள் ஊடகங்களில் வர, அதை பார்த்த சோனு சூட், மாணவனுக்கு கல்விக்கான உதவித்தொகையும், மாணவனின் தந்தைக்கு பசு மாட்டுக்கான தொகையையும் கொடுத்தார்.

சமீபத்தில் வறுமையால் சாலையோரத்தில் கம்பு சுற்றி உதவி கேட்ட மூதாட்டிக்கு உதவி செய்ய அவரது முகவரியை கேட்டு ட்விட் செய்துள்ளார். அந்த மூதாட்டிக்கு சிறிய பயிற்சி பள்ளி தொடங்கவும் முன் வந்துள்ளார். நம் நாட்டு பெண்களுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
கேட்டால் மட்டும் உதவி செய்பவர்கள் மத்தியில், கேட்காமலேயே உதவி செய்யும் உயரிய மாண்பை வைத்துள்ளார், இந்த அடக்கமான வில்லன் சாரி ஹீரோ..
சோனு சூட்டை திரையில் வில்லனாக மட்டும் பார்த்த மக்கள் இன்று அவரை கொண்டாடுகின்றனர். இதனிடையே சோனு சூட் இந்தளவிற்கு உதவிகள் செய்கிறார் என்றால் வறுமையின் வலியை அவர் உணர்ந்ததே காரணம் எனலாம்.

”சோனு நாக்பூரில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கழிவறை அருகே கூட்ட நெரிசலில் நின்று கொண்டு வருவார். வறியவர்களின் வலியை அப்போதே அவர் உணர்ந்துவிட்டார். அதேபோல், தொடக்கக்காலத்தில் மும்பையில் திரும்பிப்படுக்க கூட முடியாத அளவிற்கு குறுகிய அறையில் தான் அவர் தங்கியிருந்தார். தொழிலாளர்கள் படும் சிரமங்களை அவர் அனுபவித்திருக்கிறார். இவைகளை எல்லாம் அவர் எப்போதும் மறக்கமாட்டார்”

‘”எங்கள் அம்மா அடிக்கடி எங்களிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இது.” வாழ்க்கையில் யாருக்குமே உதவ முடியாவிட்டால் நீங்கள் இன்னும் வெற்றிபெற்ற மனிதர் அல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்” என்பது தான். இன்று அம்மா, அப்பா உயிருடன் இல்லை என்றாலும் அவர்கள் கூறிய போதனைகளும், ஊட்டி வளர்த்த மனிதநேயமும் இன்னும் எங்களிடம் உள்ளன” என பெருமிதம் தெரிவிக்கிறார் சோனு சூட் சகோதரி மால்விகா சூட்.

சினிமா காட்சிகளில் வாரி வாரி கொடுக்கும் வள்ளல்களாக இருக்கும் நட்சத்திரங்கள் நிஜத்தில் அப்படி இருப்பதில்லை. ஆனால் சினிமாவில் சொத்தை அபகரிக்கும் இந்த வில்லன், நிஜத்தில் வாரிக் கொடுக்கிறார். இதை உணர்ந்து இனி நாம் யாருக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும், யாரை கொண்டாட வேண்டும் என்பதை ரசிகர்கள் சித்திந்து பார்க்க வேண்டும்.
ரசிகர்கள் டிக்கெட்டுக்களாக கொடுக்கும் பணத்தை வாரி சுருட்டிவிட்டு ஒழுங்காய் வரிக்கூட கட்டாமல் ஏமாற்றுபர்கள் ஹீரோக்களா? அல்லது தேடி தேடி உதவும் சோனு சூட் போன்ற வில்லன்கள் ஹீரோக்களா என்பதை ரசிகர்கள் முடிவு செய்யும் நேரம் இது…
சோனு சூட் இனி நீங்கள் திரையில் வில்லனாக தோன்றினாலும் மக்கள் உங்களை ஹீரோவாக தான் பார்க்கப்போகிறார்கள்…
-விஜய் பிரபா