வெறும் 2 சென்டிமீட்டர் உயரத்தில் வலம்புரி விநாயகரின் அதி அற்புதமான மண் சிற்பத்தை திருமழிசையைச் சேர்ந்த நுண்சிற்பி டி.கே.பரணி உருவாக்கியுள்ளார்.
தமிழ்நாடு மாநிலம், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியைச் சேர்ந்தவர் டி.கே. பரணி. சந்தன மர நுண்சிற்பக் கலைஞராக. மேலும் ஒரே ஒரு அரிசியில் நுண்சிற்பங்களை செதுக்கி வரும் கலைஞர். இவர் தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக வெறும் 2 சென்டிமீட்டர் உயரத்தில் மண்ணால் ஆன விநாயகர் சிலையை செதுக்கியுள்ளார். இதற்கு வலம்புரி விநாயகர் என்றும், மூஷிக கணபதி என்றும் பெயரிட்டுள்ளார். 2 சென்டிமீட்டர் உயரத்தில் இந்த வலம்புரி விநாயகர், அவரது வாகனமான மூஞ்சூரு மீது அமர்ந்திருப்பது போல சிலை மிக அழகாகவும், அற்புதமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பீடம், வாகனம், விநாயகருடன் இணைந்து மொத்தம் 6 சென்டிமீட்டரில் அற்புதமான வேலைப்பாடுகளுடன் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை வெறும் 3 நாட்களில் டி.கே.பரணி உருவாக்கியுள்ளார். வழக்கமான சந்தன மரத்தில் நுண்சிற்பங்களை வடிக்கும் இந்தக் கலைஞர் இம்முறை மண்ணில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். இவரது தாத்தா, தந்தை என 3 தலைமுறைகளாக சந்தன மர நுண்சிற்பங்களை செதுக்கி வருகிறார். தற்போது 4-வது தலைமுறையாக இவரது மகன், மகள் ஆகியோரு நுண் சிற்பங்களை சந்தன மரங்களில் உருவாக்கி வருகின்றனர். இவரது தந்தை, அண்ணன் டி.கே. மூர்த்தி, இவர் என 3 பேரும் சந்தன மர நுண் சிற்பங்கள், அரிசியில் சிற்பங்கள் செதுக்கி குடியரசுத் தலைவரின் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளனர். அதுதவிர ஏராளமான மாநில அரசின் விருதுகள், விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் விருதுகளை வென்றுள்ளனர்.

10 மில்லி மீட்டர் உயரத்தில் தொடங்கி சுமார் ஒரு அடி உயரம் வரையுள்ள சிற்பங்களை சந்தன மரத்தில் உருவாக்கி வருகிறார் டி.கே. பரணி. சந்தன மரங்களில் விநாயகர், சிவன், முருகன், ஏழுமலையான், உலகளந்த பெருமாள், நடராஜர் சிலைகளையும், இயேசு சிலைகளையும் உருவாக்கியுள்ளார். தற்போது உருவாக்கப்பட்டுள்ள வலம்புரி விநாயகர் மண் சிலை, விநாயகர் சதுர்த்திக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக விநாயகர் சிலைக்காக பிரமாண்டமான சிலைகள், மண், பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பிளாஸ்டிக் போன்றவற்றில் உருவாக்கப்படும். ஆனால் இவர் வித்தியாசமாக 2 செ.மீ. உயரம் கொண்ட மண்ணால் ஆன வலம்புரி விநாயகர் நுண்சிலையை உருவாக்கித் தந்துள்ளார். இந்த சிலை விற்பனைக்காக உருவாக்கப்பட்டது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற நுண்சிற்ப பயிற்சியில் ஆர்வமாக உள்ளவர்கள் இந்தக் கலையைக் கற்றுத்தரவும் அவர் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். விரைவில் இந்த சிலையை சூளையிலிட்டு நெருப்பு வைத்து சுடுமண் சிற்பமாக மாற்றி, கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





