மத்திய அரசு கொண்டுவந்துள்ள சூழலியல் தாக்க மதிப்பீடுஅறிக்கை பல்வேறு தரப்பினரிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் இருக்கிறது அந்த வரைவு அறிக்கையில்?…விரிவாக பார்ப்போம் வாங்க
நம் நாடு இயற்கைவளம் நிறைந்த வேளாண்தொழிலை முதன்மையாக கொண்ட நாடு. அதனால்தான் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு தேசத்தந்தை மகாத்மா காந்தி இப்படி சொல்லியிருக்கிறார். 80 விழுக்காடு விவசாயிகளை கொண்டுள்ள நம் தேசத்தின் தலைவராக, பிரதமராக ஒரு விவசாயி இருந்தால் நம் தேசத்தின் தோற்றமே மாறிப்பபோகும் என்று கூறினார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நம் உயிர் வளர்க்க உணவளிக்கும் வேளாண் தொழிலை நாம் ஒரு பொருட்டாகவே மதிக்காதே இதற்கு காரணம். தேசிய குற்ற ஆவணப் பதிவேட்டின் அறிக்கையின் படி 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 9.4 விழுக்காடு வேளாண்துறையை சேர்ந்தவர்கள். நிலைமை இவ்வளவு மோசமாகியும் விவசாயிகளையும் வேளாண்தொழிலையும் காப்பாற்ற தேவையான நடவடிக்கைளை இன்னும் நாம் எடுக்கவில்லை. மாறாக மேலும் அவர்களுக்கு இன்னல் ஏற்படுத்தும் வகையில் தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அந்த வகையில் தான் இப்போது வரவிருக்கும் சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 அறிக்கை சட்டத்திருத்தங்கள்அமைந்துள்ளன.
சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 அறிக்கை (EIA) என்றால் என்ன?
இந்தியா என்னதான் வேளாண் சமுக நாடாக இருந்தாலும். பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்துறையும் அவசியம் அப்படி தொழிற்சாலைகள் பெருகுவதற்கு விவசாயத்தை காவு கொடுக்க வேண்டுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. ஆப்பிரிக்க நாடான சோமாலியா ஒரு காலத்தில் இயற்கை வளமிக்க நாடாக இருந்தது. ஆனால் அந்நாட்டில் ஆட்சியாளர்களின் தவறான கொள்கை முடிவுகளால் இன்று பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது சோமாலியா. அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் வேளாண் – தொழிற்துறை சமன்பாட்டை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் இஐஏ என்ற சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை. 1996 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறை பெருந்தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதை முறைப்படுத்துகிறது. பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் நிறுவப்படும் புதிய தொழிற்சாலைகள், அது அரசு நிறுவனமாக இருந்தாலும் தனியார் நிறுவனமாக இருந்தாலும அந்த தொழிற்சாலைகள் தொடங்கப்படும் தகைவிடத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை அறிந்து, அங்குள்ள பொதுமக்களிடம் அனுமதி பெற்று மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுதான் இஐஏ வின் சாராம்சம். இந்த நடைமுறையின்படி தொழிற்சாலை தொடங்கப்படும் இடத்தின் விஸ்தீரணம் அந்த இடத்தின் அருகில் உள்ள வேளாண் நிலங்கள் பற்றிய விவரங்கள், மலைகள், காடுகள், நதிகள் பற்றிய விவரங்களை மத்திய அரசிடமும் அங்குள்ள பொது மக்களிடமும் தெரிவிக்க வேண்டும். மேலும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் எவை? தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் தன்மை என்ன? அவற்றை சுத்திகரிக்கும் முறை என்ன? உள்ளிட்ட விவரங்களை பொதுமக்களிடம் தெளிவுபடுத்தி அவர்களின் அனுமதியைப் பெற வேண்டும். இந்த இஐஏ வில் 2006 ஆம் ஆண்டு சில திருத்தங்களை மேற்கொண்டது அப்போதைய மத்திய அரசு. இப்போது மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. அந்தத் திருத்தங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு கேடு விளைவிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
புதிய திருத்தங்கள் என்னென்ன?
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இஐஏ வரைவு அறிக்கையில் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மையை பாதுகாக்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றின் வலிமையை குலைக்கும் விதத்தல் புதிய திருத்தங்கள்உள்ளன என்பது தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. அப்படி என்னதான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருத்தம் 01.
சுற்றுச்சூழலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் தொடங்கப்படுடும் போதும், அவை செயல்படும் விதத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது அவசியம். அந்த வகையில் மக்களிடம் அனுமதி பெற வேண்டும் என்பது விதிகளில் முக்கியமான ஒன்று. அந்த விதியையே கேள்விக்குறியாக்கும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள EIA-வில் SATRATEGIC PLAN என்ற புதிய முறையை கொண்டு வர உள்ளது மத்திய அரசு. அதன்படி STRATEGIC PLAN என்ற அடிப்படையில் ஒரு தொழிற்சாலை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துவிட்டால் பொதுமக்களிடம் முன் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் போன்றவை இந்த STRATEGIC PLAN கீழ் வகைப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக்கப்படும்.
திருத்தம் 02.
குறைவான உற்பத்தி திறன் கொண்ட குறிப்பாக 25 மெகாவாட்டிற்கு குறைவான உற்பத்தி திறன்கொண்ட மின்சாரம் தாயரிக்கும் நிறுவனங்கள் பொதுமக்களின் அனுமதியை பெறவேண்டிய தேவையில்லை. இந்த திருத்தம் மூலம் திட்டத்தின் தொடக்கத்தில் குறைவான உற்பத்தி திறன் என கணக்கு காட்டிவிட்டு படிப்படியாக உற்பத்தி திறனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
திருத்தம் 03.
தற்போதுள்ள நடைமுறையின் படி பெரிய தொழில் திட்டங்கள் தொடங்கப்படுவதற்கு முன்னரே மத்திய அரசிடம் விண்ணப்பித்து முறையான அனுமதி பெற்ற பிறகே தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும். ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தி்ன்படி திட்டத்தை தொடங்குவதற்கு முன்னரே மத்திய அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை. திட்டம் தொடங்கப்பட்ட பிறகு மத்திய அரசிடம் விண்ணப்பித்து பின் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இந்த திருத்தத்தின் படி யார் முறையான அனுமதி பெற்றுள்ளார்கள், யார் பெறவில்லை என்பதே தெரியாமல் போகும்.
திருத்தம் 04.
ஏற்கனவே உள்ள நடைமுறையின் படி EIA வரையறையின் கீ்ழ் செய்படும் நிறுவனங்கள் தொழிற்சாலையின் செயல்பாடுகள், கழிவு மேலாண்மை அன்றாட நடைமுறைகள் குறித்து வருடத்திற்கு இரண்டு முறை மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தற்போதைய திருத்தத்தின்படி ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பித்தால் போதும். இதனால் சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயல்படும் தொழிற்சாலைகளை கண்காணிக்கும் பாதுகாப்பு நடவக்கைகள் பலவீனமாகும் அபாயம் உருவாகும் என்பதும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் பயம்.
திருத்தம் 05.
2 ஆயிரம் ஏக்கர் முதல் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவிற்குள் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் புதிய திருத்தத்தின்படி மத்திய அரசிடம் அனுமதி பெறவோ, பொதுமக்களிடம் அனுமதி பெறவோ தேவையில்லை. இந்த திருத்தமும் பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்த திருத்தங்களை நடைமுறைப்படுத்த முனைப்புக் காட்டி வருகிறது மத்திய அரசு. இந்த திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த திருத்தங்கள் தற்போதுள்ள நடைமுறைகளுக்கு எதிரானது என்றும், இந்தநடை முறைகளால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
டெல்டா மண்டலத்தில் பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ள மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், தேனி மாவட்டத்தில் தொடங்க உள்ள நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், கெயில் திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கோ, செயல்படுவதற்கோ யாரும் முட்டுக்கட்டை போட முடியாது. அந்த தொழிற்சாலைகளில் இருந்தோ திட்டங்களில் இருந்தோ யாராவது பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலோ, சுற்றுச்சூழடல் மாசு ஏற்பட்டாலோ யாரும் கேள்வி கேட்கவோ, போராடவோ முடியாது. இதற்காகத்தான் இந்த திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிகள் நடக்கிறது என்று பதைபதைக்கிறார்கள் மண் இயற்டைக ஆர்வலர்கள். மேலும், எத்தனையோ சுரண்டல்களுக்கு பின்னரும் இன்றும் இயற்கை பொக்கிஷங்களை பாதுகாத்துக்கொண்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் பேராபத்து என்றும் அவர்கள் எச்சரிக்கத் தயங்கவில்லை. எனவே வெகுஜன மக்களின் குரலுக்கு செவி சாய்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நல்ல திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்” என்பது குறள்.
பொதுமக்களுக்கு அடிப்படைத் தேவையான தூய்மையான நீரும், அவர்களின் பசியாற்ற பயிர் விளையும் வளமான மண்ணும், இயற்கை வளத்தைப் பேணிப் பாதுகாத்து மழைப்பொழிவை உண்டாக்கும் வானுயர்ந்த மலைகளும், மண் வளம் பாதுகாக்க்கும் நிழல் தரும் அடர்ந்த காடுகளும் உடையது தான் பாதுகாப்பான நாடு என்கிறார் வான்புகழ் வள்ளுவர். ஆனால் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாது ஒரு சிலரின் நன்மைக்காக விதிகளை இயற்றலும், அப்படி இயற்றிய விதிகளின் மூலம் லாபம் ஈட்டலும், அந்த லாபத்தை தனக்கென மட்டுமே காத்தலும், அப்படி காத்த லாபத்தை சுயநலனுக்காக வகுத்தலும், நல்லரசுக்கு அடையாளம் இல்லை என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். இதை இம்மண்ணில் வாழ்வோர் உணரத் தொடங்கியுள்ளனர். ஆள்வோர் உணரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
-சுரா