2006ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றவர் இந்திரா நூயி. தனது வாழ்க்கை வரலாற்றினை My Life in Full எனும் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

313 பக்கங்களைக் கொண்ட இந்த வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் அமெரிக்காவில் அவர் குடியேறும் போது கிடைத்த அனுபவங்கள், வர்த்தகம் தொடர்பாக அறைகளுக்குள் நிகழ்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள், தனது பணியையும் குடும்ப வாழ்க்கையையும் சமமாக அவர் கருதியது, பெருந்தொற்று காலத்தில் பணியிடங்களில் நிகழும் மாற்றங்கள் முதலானவற்றை தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பேசியுள்ளார் இந்திரா நூயி.
கடந்த 2019ஆம் ஆண்டு, பெப்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார் இந்திரா நூயி. 65 வயதான அவர் பதவி விலகுவதற்கு முன், பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்தப் புத்தகத்தில் அவர் பெப்சி நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு, Boston Consulting Group (BCG), Motorola, ABB ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியது முதலானவற்றோடு, குழந்தைகள் நலன், தனது குழந்தைக்கு பள்ளியில் நடந்த நிறவெறிக் கொடுமை, தனது தாயுடனான உறவு முதலான பெர்சனல் பக்கங்களையும் இதில் வெளிப்படுத்தியுள்ளார்.
2007ஆம் ஆண்டு, தனது தாய் குறித்து இந்திரா நூயி பேசியிருந்தது வைரலானது. அதில் அவர் முதன்முதலாகப் பெப்சி’ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட தகவலைத் தனது தாயிடம் தெரிவித்த போது, அதனைக் கேட்டுக் கொண்ட பிறகு, அவரது தாய் அவரைப் பால் வாங்கச் செல்லுமாறு கூறியதாகத் தெரிவித்திருந்தார். அதனை தான் எதிர்த்தபோது, இந்திரா நூயியின் தாய் அவரிடம் அவர் பெற்றகிரீடத்தை’ வீட்டிற்கு வெளியேவே விட்டுவிட்டு வருமாறு உத்தரவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தப் புத்தகத்தில் பணிக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான வசதி இந்தியாவில் இல்லாமல் இருப்பதும், அதனால் பெண்களின் பணி தடைப்படும் சூழலில் இருப்பது குறித்தும் பதிவு செய்துள்ளார். மேலும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு நிறுவனங்களின் ஆதரவு ஏன் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதோடு, அவர் பணியாற்றிய நிறுவனங்கள் அவருக்கு எப்படி ஆதரவு தந்து, அவரைக் கவனித்துக் கொண்டன என்பதையும் விளக்கியுள்ளார்.
இந்தப் புத்தகத்தைக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் எழுதி முடித்துள்ள இந்திரா நூயி பணி நேரங்களைப் பணியாளர்களின் தேவைக்கேற்ப வளைத்துக் கொள்ளலாம் என்பதை வலியுறுத்தி வருகிறார். இந்திரா நூயி தற்போது அமேசான் நிறுவனத்தின் தலைமை மன்றக்குழு உறுப்பினராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) முதல் பெண் தலைமைக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.




