இந்த கொரோனா லாக்டவுன் பல இழப்புகளை கொடுத்திருந்தாலும், மனிதனுக்கு பல பயனுள்ள விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறது. இதில் ஒன்று தான் சமையல்…
முன்னாடி எல்லாம் சொந்தக்காரங்களுக்கு போன்ல பேசும் போது உங்க ஊர்ல என்ன விஷேசம், மழை பெய்ததா? வெயில் ஜாஸ்தியா இருக்கா என்றுதான் கேட்பார்கள். இப்போது போன் பேசும் போதே இன்னைக்கு என்ன ஸ்பெஷலா சமையல் செஞ்சீங்க. புதுசா ஏதாவது ட்ரை செய்தீங்களா… இன்னிக்கு யூடியூப்ல என்ன பார்த்தீங்க என்று கேட்கின்றனர்.
வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு வகை வகையா டிபன், சாப்பாடுன்னு செய்து கொடுத்து விட்டு 10 மணிக்கு மேல் வீட்டு வேலையில் பிசியாக இருக்கும் பெண்கள் இப்படி ஒரு மிக நீண்ட விடுமுறை காலம் வரும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். அலுவலகம் போகும் பெண்களுக்கும் இது நீண்ட விடுமுறை காலம் தான்.
அரசு வேலைக்கு போகும் பெண்கள், ஆண்களுக்கு இது ரிலாக்ஸ் ஆன காலம் யாரும் இந்த பைல் உடனே போய் ஆக வேண்டும் என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்பதால் ரிலாக்ஸ் மூடிலேயே வேலை போகிறது. அதே நேரத்தில் உள்ளாட்சித்துறை, ஊடகத்துறை, சுகாதாரத்துறையில் வேலை செய்பவர்களுக்கு முந்தைய காலங்களை விட இப்போதுதான் வேலை பின்னி பெடல் எடுக்கிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு நாட்களில் விதவிதமாக சமையல் செய்து ருசியாக சாப்பிட ஆரம்பித்து விட்டனர் மக்கள். பெண்களின் ராஜ்ஜியமாக இருந்த சமையல் அறை, ஆண்களின் கைக்கு மாறி 3 மாத காலமாகிவிட்டது. பன் பரோட்டா, பட்டர் பனீர் மசாலா, முட்டை பனியாரம், பிரியாணி வகைகளை விதம் விதமாக வீட்டு அம்மணிகளுக்கு செய்து கொடுத்து அசத்துகின்றனர் ஆண்கள்.
வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு நேரம்தான் டிவி மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க முடியும். எல்லா சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்து ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பாக ஆரம்பிக்கவே, என்ன செய்வது யோசித்து புதிது புதிதாக கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டனர். எத்தனை நாளைக்குத்தான் சமையலறையை பெண்கள் கட்டி ஆள்வது, எங்களுக்கும் அதில் இடம் கொடுங்க நாங்களும் களம் இறங்குகிறோம் என்று வீட்டில் சும்மா இருந்த ஆண்கள் கோதாவில் இறங்க சமையல் அறை அதகளப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் காலத்திற்கு முன் 2 லிட்டர் சமையல் எண்ணெய் செலவு செய்த வீடுகளில் இப்போது 6 லிட்டர் வரை சமையல் எண்ணெய் வாங்குவதாக சொல்கிறது ஒரு புள்ளி விபரம். காலையில் எழுந்து டீ போடுவதில் இருந்து காலை டிபன், மதியம் லஞ்ச், இரவு டின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பிட செய்து கொடுப்பது வரை சமையல் அறை சாம்ராஜ்யத்தை பல வீடுகளில் இப்போது ஆண்கள் கைப்பற்றி விட்டனர். நேத்துவரை சுடுதண்ணீர் கூட வைக்க தெரியாமல் இருந்தவர்களை இந்த லாக்டவுன் காலம் கை தேர்ந்த சமையல்காரர்களாக மாற்றி விட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
கணவரின் சமையல் திறமையை பார்த்து நீ இஞ்சினியர்தானே கேட்ரிங் டெக்னாலஜி படிச்ச மாதிரி சமையல் செய்யறியே என்று மனைவி கேட்கத் தொடங்கி விட்டார்கள். அந்த அளவிற்க சமையலில் பின்னி பெடல் எடுக்கிறார்கள். சமோசா, பன் பரோட்டா, பட்டர் சிக்கன், என விதம் விதமாக ருசி ருசியாக சமையல் செய்து கொடுத்து அசத்துகின்றனர் ஆண்கள். இந்த திறமையை எல்லாம் இத்தனை நாளாக எங்கே ஒளிச்சு வச்சிருந்தீங்க என்று கேட்க ஆரம்பித்து விட்டனர் பெண்கள்.
கொரோனா வைரஸ் லாக் டவுன் ஆரம்பிக்கும் முன்பு வரை சமையல் அறை எங்கே இருக்கிறது என்று தெரியாத பல வீட்டு லிட்டில் பிரின்சஸ்கள் இப்போது பொறுமையாகவும், பொறுப்பாகவும் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். சமையல் செய்வதெல்லாம் ஒரு வேலையா என்று கேட்ட பலரும் சமையலை ஒரு கலை என்று நினைத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். எல்லோருக்கும் கை கொடுக்கிறது யூடியூப் சமையல் சேனல்கள். எது எப்படியோ இதுநாள்வரை சாப்பிட மட்டுமே தெரிந்த பலரையும் சமையல்கலையில் நிபுணர்கள் ஆக்கிவிட்டது லாக்டவுன் காலம்.
லாக்டவுன் நாட்களில் சிலரோட அனுபவங்களைத்தான் நாம இங்கே சொல்லப்போறோம்.
“வேலை முடிச்சு வீட்டுக்கு வந்தோமா, செய்து கொடுத்ததை சாப்டோமான்னு தான் இவ்ளோ நாள் இருந்தேன். ஆனால் இப்போ அலுவலக வேலையை வீட்ல இருந்து தான் பாக்குறேன். அதனால் இவ்ளோ நாள் தவறவிட்ட லைப் இப்போ கிடைச்ச மாதிரி இருக்கு. வீட்டை கவனிக்காமல் ஆபிஸ்… ஆபிஸ்ன்னு இருந்திருக்கிறேன்னு இப்போ தான் புரியுது. வீட்டு வேலை ஈஸின்னு இவ்ளோ நாள் நினைச்சேன். அதுவும் தப்புன்னு இப்போ புரிஞ்சுகிட்டேன். எப்போதும் ஆபிஸ் வேலைன்னு குழந்தைங்ககிட்ட எரிஞ்சு விழுவேன்.என்கிட்ட வர பயந்த குழந்தைங்க, அப்பா இதை செஞ்சு தாங்க, அதை செஞ்சு தாங்கன்னு கேக்குறாங்க. தாங்கஸ் டூ லாக்டவுன் என்கிறார்”, ராஜ்குமார்.
மேகி செய்துவிட்டு இமாலய சமையல் செய்தது போல உணர்ந்துகொண்டிருந்த கல்லூரி மாணவிகள் இன்று சிக்கன், மட்டன், பிரியாணி என வகைவகையாக சமைத்து அசத்திக் கொண்டிருகின்றனர்.சமையல் என்பது வெறும் பசிக்காக தான் என்று இருந்த காலம் மாறி தற்போது சமையல் ஒரு பொழுதுபோக்காக மாறியுள்ளது.
“லாக்டவுன் ரொம்ப போர் அடிக்குதுன்னு சமையலறை பக்கம் வந்தேன். இப்போ எப்பவும் இங்கே தான் இருக்கேன் என்கிறார், கல்லூரி மாணவி ஜெக செளந்தர்யா. நான்வெஜ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதையே நான் முதலில் செய்ய தொடங்கினேன். போர்ன்னு நினைச்ச சமையல் தான் உலகத்திலேயே ரொம்ப ஜாலியான விசயம்னு இப்போ தான் தெரியுது. உங்களுக்கு என்ன வேண்டும் சிக்கனா, மட்டனா என நம்மிடமே கரண்டியை நீட்டி கேட்கிறார்”, ஜெக சௌந்தர்யா.
ஏற்கனவே சமையல் தெரிந்த மாணவிகளுக்கும் இந்த லாக்டவுன் கூடுதல் உணவு ருசியை கொடுத்திருக்கிறது. மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி அலமேலு செட்டிநாடு சமையலில் தற்போது அசத்தி வருகிறார்.
“லாக்டவுன் காலத்தில் தினம் தினம் ஒரு சமையல் ஐட்டத்தை செய்து வீட்டையே ஒரு மினி உணவகமாக மாற்றியுள்ளார். காலேஜ் கேள்ஸ் நாங்களாம் … கோவாமா இருந்தாலும் சாப்பிடுவோம், சந்தோஷமா இருந்தாலும் சாப்பிடுவோம்… அதனால இனி வித வித சமச்சு சாப்பிடபோறமே” என்றார் மாணவி அலமேலு..
90’s கிட்ஸ்கள் கல்லூரிகளில் படிக்கும்போது அவர்களிடம் யாராவது சமையக்க தெரியுமா என்றால், தனக்கு வெண்ணீரை தவிர வேறு ஏதும் வைக்க தெரியாது என்பது தான் பொதுவான பதிலாக இருந்தது. அந்த 90’s கிட்ஸ்கள் சமையல் அறையை தொடர்ந்து தவிர்த்தே வந்தனர். சமையல் அறையை 2 மணி நேர சிறைவாசமாகவே கருதினர். ஆனால் அது சிறை அல்ல கலர்புல் ஏரியா என இப்போது தான் புரிகிறது என்கிறார், வாலு அலமேலு.
வீட்டு ஆண்கள் சமையல் செய்ய, பெண்களோ ஒன்றாக கூடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல், நீங்க புதுசா என்ன செய்தீங்க, வீடியோ போடுங்க பார்க்கலாம் என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். அது மட்டுமல்லாது இன்னும் எத்தனை நாளைக்கு இந்த லாக்டவுன் நீடிக்குமோ? என்னென்ன புதுசு புதுசா கத்துக்க போறாங்களோ பார்க்கலாம்.
-விஜய் பிரபா