சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது வரலாற்றில் புதிதல்ல. தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமாக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் அரசியல் களத்தில் குதிக்கும் ஆசை வந்தது. ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் இன்று நேற்று அல்ல, 1992 முதல் பேசுபொருளாக உள்ளது.

1996ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக, “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற இயலாது” என்று கூறினார். திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தார். இதன் தாக்கம் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டு, திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதற்கு அடுத்து வந்த ரஜினியின் படங்களிலும், பாடல்களிலும் அரசியல் வசனங்கள் தேவைக்கு அதிகமாகவே இடம்பெற்றது.

பாபா பட விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த தனிப்பட்ட மோதலால், 1999 ஆம் ஆண்டு தேர்தலில் தன் ரசிகர்கள் யாரும் பா.ம.கவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால், இதையும் கடந்து பா.ம.க பல இடங்களில் வெற்றி பெற்றது. 1996 ல் அவரின் பேச்சினால் ஏற்பட்ட தாக்கம், 1999ல் ஏற்படவில்லை. மேலும், இந்த நிகழ்வு ரசிகர்களை மட்டும் நம்பி அரசியலுக்கு வருவது பெரும் தோல்வியை கொடுத்து விடுமோ? என்ற அச்சத்தையும் ரஜினியிடம் ஏற்படுத்தியது. அதிலிருந்து இன்று வரை ரஜினி எந்த தேர்தலின் போதும் தன் ஆதரவு யாருக்கு என்று வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தெரிவிக்கவில்லை.

ஆனால், படங்களில் அரசியல் பேசுவதை மட்டும் நிறுத்தவில்லை. இதனால் அவரது ரசிகர்கள், தன் தலைவன் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வருவார் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஒவ்வொரு முறை அறிவிப்பு வரும் போதும், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவரது உடல் நிலை காரணமாகவும் கட்சி குறித்த முடிவுகள் தாமதமானது.
இந்த தாமதத்திற்கு 1999ல் நடந்த நிகழ்வும் முக்கிய காரணமாக உள்ளது.அரசியலில் தன் பேச்சு எடுபடாமல் போய்விடுமோ என்ற அச்சம் தான் காரணம். ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வியடைய விரும்பவில்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் எந்த கட்சிக்கு ஆபத்து? என்று கேட்டால், ரஜினிக்கு ஆபத்து என்பது தான் பதில்.

இதையே தான் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த அவரது நண்பர் சிரஞ்சீவியும் தெரிவித்துள்ளார். திரையில் உச்சத்தில் இருக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி 294 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றார். மேலும், தனது சொந்த தொகுதியான பலேகால் தொகுதியில் தோல்வியடைந்தார். இவைதவிர, கொரனோ அச்சம் மற்றும் அவரது உடல் நிலை காரணமாகவும் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்துவிட்டார் ரஜினி. இந்தமுடிவை அவரது ரசிகர்களும், அரசியல்தலைவர்களும் வரவேற்றுள்ளனர். ஆனால், ரஜினியை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி தமிழகத்தில் வலுவாக காலூன்ற நினைத்த பாஜகவுக்கு தான் அவரின் இந்த முடிவு ஏமாற்றமாக இருக்கும்.





