நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இல்லங்களை அலங்கரிக்கும் இந்த ஓடிடி தளங்கள் எல்லை மீறுவதாக தொடர் புகார்கள் வருகின்றன. குறிப்பாக இதில் வெளியாகும் வெப்சீரிஸ்கள் அநாகரீமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன
ஒரு செல்போன், அதற்கு டேட்டா இவை இரண்டும் இருந்தால் போதும் நீங்கள் பார்க்க விரும்பும் படத்தையோ, சீரியலையோ சட்டப்பூர்வமாக பார்த்துவிடலாம். துல்லியமான காட்சியுடனும், டிஜிட்டல் சத்தத்துடனும் உங்கள் வீட்டின் வரவேற்பறைக்கு படங்களை கொண்டு வரும் ஒரு அற்புதமான பிளாட்பார்ம் தான் இந்த ஓடிடி தளங்கள். அதுவும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என அறுதலாய் கூறியது இந்த ஓடிடி தளங்கள் தான்.
இன்று ஒரு படத்தை திரையரங்கில் சென்று குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றால் படத்தின் டிக்கெட், பார்க்கிங், ஸ்னேக்ஸ் என்று கணக்குபோட்டால் ஆயிரக் கணக்கில் செலவாகும் . ஆனால் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்களில் ஆயிரம் ரூபாய் கட்டினால் 3 மாதங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள், இணையத் தொடர்களை பார்த்துவிடலாம்.
அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் தான் பார்க்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, ஒரே நேரத்தில் முழுமையாக பார்த்தாக வேண்டிய அவசியமும் இல்லை.
நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இல்லங்களை அலங்கரிக்கும் இந்த ஓடிடி தளங்கள் எல்லை மீறுவதாக தொடர் புகார்கள் வருகின்றன. குறிப்பாக இதில் வெளியாகும் வெப்சீரிஸ்கள் அநாகரீமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதில் இடம்பெறும் காட்சிகள் மிகவும் ஆபாசமாக உள்ளது. மேலும் வசனங்கள் மிகவும் கொச்சையாகவும், அநாகரீமாகவும் இருக்கிறது என்றும் எரிச்சல் பதிவுகள் வருகின்றன.
இதற்கு காரணம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படம் மற்றும் வெப்சீரிஸ்களுக்கு தணிக்கை செய்யப்படாதது தான். திரையரங்கில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னாள் அந்த படம் நிச்சயம் தணிக்கை குழுவுக்கு செல்ல வேண்டும். அவர்கள் அந்த படத்திற்கு A அல்லது U இல்லையென்றால் U/A சான்றிதழ் வழங்குவார்கள். மிகவும் கோரமாகவும், வன்முறையை தூண்டும் வகையில் ஏதேனும் காட்சிகள் இருந்ததால் அதற்கு அனுமதி தர மாட்டார்கள். ஆனால் இந்த வெப்சீரிஸ்களுக்கு எந்த ஒரு கட்டுப்பாடுளும் இல்லை. அவர்கள் யாரிடமும் அனுமதி பெற வேண்டும் என அவசியமும் இல்லை.
அவர்கள் வைப்பது தான் காட்சி, அவர்கள் பேசுவாது தான் வசனம் என எந்தவித கோட்பாடுகளும் இல்லாமல் இவை எடுக்கப்பட்டு வெளியாகின்றன. இந்த வெப்சீரிஸ்களை பெரும்பாலம் இல்லங்களில் தொலைக்காட்சிகளில் இணைத்து குடும்பத்துடன் பார்க்க முடிவதில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சீரியல்கள் மட்டும் தான் குடும்பத்துடன் பார்க்கும் படி உள்ளதாக பலர் கூறுகின்றனர்.
சுய கட்டுப்பாடு இல்லாமல் திறந்து காட்டும் இந்த வெப்சீரிஸ்கள் பள்ளி மாணவர்கள் கையிலும் செல்கிறது என்பது தான் மிகப்பெரிய வேதனை. குறிப்பாக அவர்களுக்கு ஆபாச காட்சிகளை அனுமதியுடன் காட்டுகிறது இந்த வெப்சீரிஸ்கள். ஆபாச காட்சிகளுடன் இது நிற்கிறதா என்றால் இல்லை, இவை பேசும் விஷயங்கள் தொடர் சர்ச்சையை கிளப்பும் வகையில் இருக்கிறது. குடும்ப உறவுகளை கொச்சையாக காட்டும் ஏராளமான வெப்சீரிஸ்கள் தொடர்ந்து உலா வந்துகொண்டு தான் இருக்கின்றன.
ஒரு படைப்பாளிக்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படும் ஒரு தளமாக இது இருந்தாலும், இந்த சமூகத்தை நல்ல வழியில் கொண்டு செல்லவேண்டி பொறுப்பும் இந்த படைப்பாளிகளுக்கு இருக்கிறது. இந்த வெப்சீரிஸ்கள் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது படைப்பாளிகள் கையிலும், எல்லை மீறினால் கட்டுப்படுத்தவேண்டியது அரசின் கையிலும் தான் உள்ளது…
விஜய்பிரபா-