ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில், கோலி மற்றும் ரோஹித் முதல் இரு இடங்களை பிடித்து அசத்தி உள்ளனர்.
கொரோனா பரவலை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. 3 மாதங்களுக்கு பிறகு தற்போது இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் தொடர்ந்து மோதி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து -அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிந்ததை அடுத்து, ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதில், இந்திய அணி கேப்டன் விராட்கோலி (871 புள்ளி), துணை கேப்டன் ரோகித் சர்மா (855 புள்ளி), பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (829 புள்ளி) ஆகியோர் எந்த மாற்றமும் இன்றி தங்களது இடங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு இடம் முன்னேறி 22-வது இடத்தையும், பேர்ஸ்டோ ஒரு இடம் ஏற்றம் கண்டு 13-வது இடத்தையும் பெற்றுள்ளனர். அதேபோட்டியில், அதிரடியாக ஆடி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்தின் ஆண்ட்ரூ பால்பிர்னி 42வது இடத்தையும், பால் ஸ்டிர்லிங் 26வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (722 புள்ளி) முதலிடத்திலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (719 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். ஆல்-ரவுன்டர்கள் பட்டியலில் இந்திய வீரர் ஜடேஜா 8வது இடத்தை பிடித்துள்ளார்.