மேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ மரணத்தை தொடர்ந்து அங்கு அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது. மம்தா அரசை கலைக்க வேண்டும் என பாஜகவினர் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 13 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தினாஜ்பூர் பகுதியில் உள்ள மார்க்கெட் ஒன்றில் ஹேமலாபாத் தனி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ தீபேந்திரநாத் ராய் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியாத நிலையில் காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபேந்திரநாத் ராய் பின்னர் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் எம்.எல்.ஏ.ராயின் மரணத்திற்கு திரிணமுல் காங்கிரஸ் தான் காரணம் என பாஜக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.
எம்.எல்.ஏவின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மேற்கு வங்க பா.ஜ.க.மூத்த நிர்வாகிகள் குடியரசுத் தலைவரை சந்தித்து மம்தா அரசை கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2016 முதல் அம்மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் படுகொலைகளை பட்டியலிட்டுள்ள பாஜக, மாநிலத்தின் அசாதாரண சூழ்நிலைக்கு மம்தா அரசே காரணம் என ஆணித்தரமாக குற்றம்சாட்டுகிறது. அடுத்த ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது திரிணமுல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா மம்தா?
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டதட்ட பத்து வருடங்களாக ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் மம்தா பானர்ஜியின் ஒரே நம்பிக்கை இடதுசாரிகளுக்கு எதிரானவர் என்பதுதான். கிட்டதட்ட நாற்பதாண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்கத்தில் பெரிதளவிலான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்ற வாக்காளர்களின் சலிப்பு தட்டிய மனநிலைதான் 2011ல் மம்தாவிற்கு ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. ஆனால் கடந்த நாற்பதாண்டுகளைப் போலவே இந்த பத்தாண்டிலும் மேற்கு வங்கத்தில் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை என இடதுசாரி எதிர்ப்பு மனநிலையில் உள்ளவர்கள் எண்ணத்தொடங்கிவிட்டனர். இந்த அரசியல் இடைவெளி மேற்கு வங்கத்தில் வலதுசாரி அமைப்பான பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு காரணமாக அமைந்தது.
மே.வங்கத்தில் அரசியல் படுகொலைகள் சகஜமென்றாலும் சாமானிய மக்களிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்திய கலவரங்கள், படுகொலைகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்லின்போது வெடித்த கலவரத்தில் பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரமும் படுகொலைகளும் மம்தா மீதான நடுநிலை வாக்களர்களின் ஆதரவை அவருக்கு எதிராக திருப்பி உள்ளன என்றால் மிகையில்லை.

மேலும் பா.ஜ.கவின் என்ஆர்சி முறை அறிமுகம் முதன்முறையாக நடுநிலை வாக்காளர்களில் கணிசமான மக்களை பாஜக பக்கம் திருப்பி உள்ளது. பாஜக முன்னெடுத்த வங்கதேச இஸ்லாமியர்களுக்கும் ரோஹிங்யாக்களுக்கும் எதிரான பரப்புரை இடதுசாரி எதிர்ப்பு மற்றும் மம்தா அதிருப்தி மனநிலையில் உள்ள வாக்காளர்களை தன்பக்கம் இழுக்க வைத்தது.
மேலும் கடந்த ஆண்டு சத்தியஜித் பிஸ்வாஸ் என்ற சட்டமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டதும் சமானிய மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும் என்ஆர்சி-க்கு எதிராக மம்தா ஆதரவோடு நடைபெற்ற போராட்டங்கள், அம்மாநிலப் போக்குவரத்து தொழிலாளர்களின் நெடிய போராட்டம் ஆகியவையும் மம்தா அரசு மீதான சலிப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம். மேலும் கடந்த பத்தாண்டுகளில் பெரியளவில் தொழில்துறை முன்னேற்றமும் அம்மாநிலத்தில் ஏற்படவில்லை.
தொழில் நிறுவனங்களுக்கு எதிரான மனநிலையை மம்தா அரசு கொண்டிருப்பதாக பொதுமக்கள் எண்ணத் தொடங்கியதிலும் தவறில்லை. இப்படி மம்தா அரசிற்கு எதிர்வலு சேர்க்கும் அம்சங்கள் கூடிக்கொண்டே போவது பாஜக விற்குத்தான் ஆதாயம். எனவே அடுத்தாண்டு அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க பிரம்மபிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை மம்தாவிற்கு எதிராக தேர்தல் முடிவுகள் அமைந்தால் ஆட்சிப்பொறுப்பேற்கும் வாய்ப்பு பாஜக-விற்கா இடதுசாரிகளுக்கா என்பதும் நிதர்சனமில்லை.
எந்த நிலையிலும் சமரச செய்துகொள்ள முடியாத மூன்று கட்சிகள் இப்போதிருந்தே தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டத் தொடங்கிவிட்டன. மேற்குவங்கத்தின் அரசியல் கலவரத் தீ, அரசியல் எதிர்காலத்தை என்னவாக்கும்? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
-சுரா