இன்றைய உலகம் இணையம் இல்லாமல் ஒரு நாளாவது இயங்க முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். இணையத்தின் மூலம் உலகின் ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் மக்கள் தங்கள் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி இணையத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது தான் யூடியுப். உலகின் ஒரு மூலையில் இருந்த ஆச்சரியங்கள் மற்றும் அவலங்களை மறு மூலையில் இருப்பவனும் பார்க்கச் செய்தது இந்த யூடியுப் தான். அதனுடன் மட்டும் அல்லாமல் ஆட்சி மாற்றத்தில் தொடங்கி சில உள்நாட்டு புரட்சிகளையும் வெடிக்கச்செய்தது இந்த யூடியுப். தெருவோரத்தில் பாடல் பாடியவர் கோபுரத்திற்கு செல்லவைத்தும் யூட்டியுப் தான், கோபுரத்தில் இருந்தவரை தெருவுக்கு வரவைத்ததும் இந்த யூடியுப் தான். மிதமிஞ்சிய வீடியோக்களால் யூடியுப் நிரம்பி வழியும் நேரத்தில் தற்போது அதே பாணியில் பாட்காஸ்ட் என்னும் புதிய தொழில்நுட்பம் மக்களை கவர்ந்து வருகிறது.
யூடியுப்பில் ஒரு வீடியோ பதிவேற்ற வேண்டும் என்றால் அதற்கு பல்வேறு வேலைபாடுகள் தேவைப்படும் வேளையில் இந்த பாட்காஸ்ட்டுக்கு வெறும் மைக் மட்டும் இருந்தால் போதும். நீங்கள் சொல்ல நினைப்பதை அழகாக உங்கள் குரலிலேயே ரெக்காட் செய்து சொல்லி விடலாம். யூடியுபை போல இங்கும் நீங்கள் ஒரு சேனலை உருவாக்கி அதன் வழியாக சப்ஸ்கிரைபர்ஸ்களையும் சுலபமாக அள்ளி விடலாம். குறிப்பாக ஆர்ஜே கனவுடன் இருக்கும் நபர்களுக்கு பாட்காஸ்ட் ஒரு வரபிரசாதம். அப்படி ஒரு கனவுடன் பாட்காஸ்டில் நுழைந்தவர் இளம்பெண் தான் யோகி ராமச்சந்திரன். இவரின் கதைபோமா என்ற பாட்காஸ்ட் சேனலுக்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள். இன்றைய நாளை அலங்கரிக்கும் செய்திகளில் தொடங்கி நாவல்கள் வரை இவர் தரும் தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது இவரது ரசிகர்கள் கூட்டம். ஒவ்வொருவருக்கும் திறமைகள் ஒளிந்திருக்க, எனக்குள் இருந்த திறமையை வெளிக்காட்ட உதவியது இந்த பாட்காஸ்ட் தான் என்று ஆர்ஜேக்கள் பேசுவது போல மெல்லிய புன்னகையோடு சொல்கிறார் யோகி ராமச்சந்திரன். இந்த பாட்காஸ்ட் வரும் காலங்களில் யூடியுப் அளவுக்கு பிரபலம் அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இந்தியாவில் பாட்காஸ்ட் தற்போதுவரை பிரபலம் அடையவில்லை என்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். அரசியல் தொடங்கி சமையல் வரை பாட்காஸ்ட்டில் ஆடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. யூடியுப் செய்த புரட்சிகளை பாட்காஸ்டும் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் யூடியுப்பை பயன்படுத்தும் கட்சிகள் இந்த பாட்காஸ்ட் பக்கமும் திறம்ப வாய்ப்பு உள்ளது. இந்த உலகம் தொழில்நுட்ப புரட்சியால் பல்வேறு மாற்றங்களை சத்தித்துள்ளது. இந்த புரட்சியில் பாட்காட்ஸ்டும் இணையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர்:பிரபா